சனி, 22 அக்டோபர், 2016

உள்ளொளி:

வருந்தாதே மனமே! வாய்ப்பிழந்து போகவில்லை! வாழ்வை சலவை செய்து,உள்ளே பழுத்திருக்குது மனது!
கடந்திருப்பதோ காலத்தின் ஒரு பகுதி! இன்று தெளிந்தாலும் முழுமை நோக்கியே முதலடி வைக்கலாம்! காலம் உனக்கு சிறகு தந்தது ஈக்களோடு பறக்க அல்ல! தேனிசை பாடும் குயில் நீ! முப்பது நாளும் முட்டையிடும் கோழியல்ல! கருவாட்டுச் சந்தையில் ரோஜா விற்க முயலாதே!உன் போதிமரம் தேடு! அதனடியில் உட்கார் ! உலகக் காற்றை எல்லாம் உள்ளிழு !வாழ்வெனும் கடலை மூச்சு முட்டக் குடி !ஊணினைச் சுருக்கி ,உள்ளொளி பெருக்கு ! ஏழாம் அறிவுக்கு ஏறி வா !உலகம் உன்மீது எறிந்த தூற்றுக்களை தூர எறி ! ஓரிடம் இராதே ! ஓடு....ஓ....டு!ஒரு நாள் நதிக்கரை! ஒரு நாள் மலையடிவாரம் ! ஒரு நாள் ஒரு குகைப் பிளவு ! மறுநாள் ஒரு மரத்தோப்பு ! ஒரு நாள் மக்கள் நாடும் மால் ! மறுநாள் மாம்பலம் !
சுக்குநூறாகி லேசாகட்டும் மனது ! இதுவரை நீயென்று கருதிய நீ ஒழிந்தால் ஒழிய,நீயல்லாத நீதான் இனி நீ ! அன்று தோன்றும் உனக்கு,உலக மானுடம் பருக ஏங்கும் ஞானப்பால் !

வெள்ளி, 21 அக்டோபர், 2016

ஒரு மாறுதலுக்கு :

ஒரே மாதிரி உதிக்கும் சூரியன் !ஒரே மாதிரி வீசும் காற்று!ஒரே மாதிரி நகரும் வாழ்க்கை!மழையும் வழக்கம் போல் மேலிருந்து கீழ்!ஒரே மாதிரி தூக்கம் / கனவு / உணவு ! எப்படித்தான் இப்படியே வாழ்வதோ ? ......என்று சலிப்பு வந்தால்......இதோ தீர்வு :

வாரத்தில் ஓர் நாள் ,பகலெல்லாம் தூங்கி ,இரவில் விழிக்கலாம் ! மொட்டை மாடியில் மல்லாந்துப் படுத்து ,வானத்தின் நீள,அகலம் அளக்கலாம் ! நட்சத்திரம் எண்ணலாம்! பட்டாம் பூச்சிப் பிடித்து...பறக்க விடலாம் ! வயதாக, ஆக,வாழ்வோடு ஏன் விவாகரத்து? குழந்தைகளோடு கூடி விளையாடி.... திட்டமிட்டு.....தோற்றுப் போகலாம் !கண்ணிரண்டும் மூடியபடி,தொலைபேசியில் ஓர் எண் அடித்து,எதிர்முனையில் எந்த நபர் வரினும்,அன்னாரை அன்புடன் விருந்துக்கு அழைத்து,வாங்கிக் கட்டிக் கொள்ளலாம்! வீட்டுப்பிள்ளைக்கு விடுமுறை விட்டு,நீங்கள் பள்ளிக்கு சென்று வரலாம் !மேகம் உடைந்து மழை பெய்தால்,ஓடிச் சென்று தொப்பையாய் நனையலாம்!மழை பெய்த களிமண் நிலமாய்,மனதை எப்போதும் நெகிழ்வாய் வைக்கலாம் ! ஓடும் பேருந்தில் ஏறிய பெண் உதிர்த்தப் பூவை,பணம் கண்டெடுத்தது போல் காவல் நிலையம் ஒப்படைக்கலாம் !
மரணத்தில் கூட.....மாறுதல் காணலாம் ! அழாத ஒவ்வொரு ஆத்மாவுக்கும் , அரை கிலோ அல்வா அன்போடு கொடுக்கலாம் !

வியாழன், 20 அக்டோபர், 2016

கேள்வி ஞானம்:

பெரிய மனிதன் தொடர்பு வேண்டுமா , அதிகாலைப் புறப்பட்டுப் போ..... இல்லையேல் , அவனினும் பெரியோன் தேடி......அவனே போயிருப்பான் ! அறிவாளியாய் இரு ! முட்டாளாய் நடி !எப்போதும் கைக்குட்டை ,இரண்டு கொள்,தும்மலுக்கொன்று,தூய்மைக் கொன்று ! நாய்க் குரைத்தால் ஓடாதே , அச்சப் படல் ,நாய்க்கு,அழைப்பு மடல் !எளியதன் பலகீனம்,வலியதன் பலம் !பயணமா ? பெட்டியிலும் , வயிற்றிலும் ,இடம் காலி இருக்கட்டும் !சாப்பாட்டு மேஜையும்,தூங்கும் கட்டிலும் தொடமுடியா தூரம் இருக்கட்டும்!உன் ஆயுள் நீளம்,அந்த தூரம் !தும்மல்,அன்பு இரண்டையும் வெட்கப்படாமல் வெளிப்படுத்து!அடக்க முயன்றால்... வேண்டாத இடத்தில் வெளிப்பட்டு விடும் !
உருவம் கண்டு எடைபோடாதே! ஒவ்வொரு விதையிலும் ஒரு விருட்சம் ஒளிந்திருக்கும் அபாயம் உண்டு !அறுபது வரை பணம் தேடு! அதற்கு மேல் ஆத்ம திருப்தி நாடு! இல்லையேல் துரத்துமே நாடும் வீடும் ! அப்போது வரவேற்கக் காத்துக் கொண்டிருக்குமே அந்த  அந்திமக் காடு.... !

புதன், 19 அக்டோபர், 2016

ஓம்

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக
படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்
என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங். "மெல்லிசை மன்னர்கள்"
விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான
சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.
படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார். அதன்படி, அந்த
நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி
இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம்
தெரிவித்தார். வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு
எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்
விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என
குழம்பினார்கள். திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே," எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும்
கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்
கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார். கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால்
இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக
வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன். இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.
"எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)... எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)...vஅல்லாவின்
பெயரைச் சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்).. என்று
முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்.. கூடவே இயக்குனர்
ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில்
ஆழ்ந்தார். அதே போல இந்தப் பாடல் முழுக்க "முதலுக்கு அன்னை என்போம்(ஓம்), முடிவுக்கு தந்தை
என்போம்(ஓம்)"  என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு
முக்காட வைக்கும்.
அந்தப் பாடல்.

கவியரசின் தத்துவங்கள் :

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்! வாசல் தோறும் வேதனை இருக்கும் ! வந்த துன்பம் எதுவென்றாலும் ,வாடி நின்றால் ஓடுவதில்லை! எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து,நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு !

தெய்வத்தை நினைவு கொள்ளவே.....நினைப்பதெல்லாம் நடப்பதில்லை!

 நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை ! முடிந்த கதை தொடர்வதில்லை,இறைவன் ஏட்டினிலே!
நடந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே!
எங்கே வாழ்க்கை தொடங்கும்,அது எங்கே எவ்விதம் முடியும்,இதுதான் பாதை,இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது! பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்!மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் !

கவிதைக் குழந்தை:

அதிகாலை ....கடமை உந்த , கழுவாத முகத்துடன் எழுந்தான் ஆதவன்.வானப் புத்ககம் வாசிக்க ஆளில்லாமல் திறந்தே கிடந்தது. நடைபயில விழையும் நட்டு வைத்த மௌனங்களாக மரங்கள் ஏங்கின.அங்காங்கே உற்சாகமாய் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்களைக் கானகத்தில் மட்டுமல்ல .....காட்டுப்பாக்கத்திலும் காணலாம் ......... மனக்கண்ணால் !
இயற்கையைக் காதலித்து , வந்த வாழ்வை மணந்து கொண்டால்.....கவிதை பிறக்கக் காக்கத் தேவையில்லை! கட்டுப்பாடின்றி ,கணக்கின்றிக் கவிக் குழந்தைகள் பிறக்கும்! கலைந்த தலையும்,முள்ளோடு முகமும்,அழுக்கு லுங்கியும்,ஒரு தடையே அல்ல.....கவிக் குழவிப் பிரசவிக்க கைபேசி ஒன்றே போதும்!படித்த முகங்கள்,பாமர முகங்கள்,கனவு கலையா முகங்கள், கழுவாத முகங்கள்,அ ன்பு முகங்கள்,ஆர்வ முகங்கள்,மழலை முகங்கள்,மாதர் முகங்கள்......ஆக எந்த முகங்களும் ஏற்கவே செய்யும்.....ரசிப்பதற்கு.....மனம்..... தயாரானால்......எதையும்.....கவிதை ....உட்பட ! காண்பீர் இன்றே !

கபாலி ரிலீஸ்

22 ஜூலை 2016,அகிலம் முழுதும் ஆர்ப்பரிக்க,அன்று சூப்பர் நட்சத்திரம் ...திரையரங்குகளில் பிரசவித்த தேதி!  தேதியும், மாதமும் பனிரெண்டாய் தொடங்கியப் பயணம்!புகழின் உச்சியில் ஒரு ஜன்மம்! அதன் படப்பிடிப்பு என்றால்… செவ்வாய் கிரகத்திலும் கூட்டம் கூடும் !நடிப்புக்கோர் சிவாஜி …என்றால் தனக்கென்று ஓர் தனிவழிகண்ட...... சிவாஜி ராவ்! வேற்று மண்ணில் பிறந்தும் தமிழ் நாடே போற்றும் புகழ்!குறுகிய காலத்தில் பட்டினியையும், பட்டத்தையும் ருசித்த அனுபவத்தில் அறிந்த பாடம்……" திருப்தி என்பது பொருளில் அல்ல அது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்! "என்றரிந்து கொண்ட....ஓர் ஆறரிவு ! மனிதனாக வாழ முயல தினமும் வாழ்க்கைப் புத்தகம் வாசிப்பவர்!சம்பந்தமில்லாதத்  துறையிலும் ஞானியாகத்  திகழ்பவர்! அரசியல் அழைத்தும் அதைப் பற்றித் தெளிந்ததால் …அதை அலட்சியப் படுத்துபவர்! எந்த அந்தஸ்திலும் எளிமை,பணிவு கொண்ட ஒரு வித்தியாசம்!கோயிலுக்கு வெளியே பாலாபிஷேகம் பெறும் சாமி!கண்ணுக்குத் தெரியும் கடவுள்...........கபாலிடா.........டா......ஆ.....!

அன்னையை நினைக்க அன்னையர் தினம் மட்டும் தேவையில்லை:

 அன்னையே! அன்பே! அமுதமே!பஞ்சநாதம் மருமகளாகிப் பஞ்சத்தையும் ஒரு கைப் பார்த்தவளே !வீணையை வீசியெறிந்து,கடமையைக் கையிலெடுத்த கலைமகளே !சரசுவதியே! எங்களைக் கரை சேர்க்க...ஒரு துரையக் கைப்பிடித்தவளே! இடைவெளிக் கம்மியா ஏழப் பெத்தெடுத்து ஒண்ணப் பறி கொடுத்தவளே!இன்னொன்ன நாங்கப் பறி கொடுத்த கதையறிவாயோ...கற்பகமே !எங்க எல்லா வயிறும் பசி பார்க்கக் கூடாதுண்ணு....தன் பசி மறந்தத் தன்னலமற்றத் தியாகமே!தாய்மையின் உதாரணமே!உன் பெருமை எடுத்துச் சொல்ல, அகராதி அனைத்தும் தேடி,வார்த்தையேக் கிடைக்காம வாடியேப் போனேனம்மா!
 மழலைகளைச் சுமந்த உன் மடி.....இந்த மழலைக் கவியைச் சுமந்தால் ஆகாதோ!பாசத்துக்கு பஞ்சம் பாக்காத நீ காசு பணம் பாக்கல்லியே! கரையேத்தினப் புள்ளைங்கெல்லாம் காசுப் பணம் கண்டப்போ...கருணையே இல்லாமக் காணாமப் போனதென்ன....தயவில்லாதத் தாயே !தியாகத்தின் தியாகமே! காசும் பொருளும் உன் காலடிக்கு ஈடாகுமா ? பத்துத் திங்கள் சுமந்தவளே....பத்தரை மாத்துத் தங்கமே! உன் இழப்பை நினச்சாலே ...நெஞ்செல்லாம்...பிசையுதம்மா! நீ பிசைஞ்சூட்டிய சோற்றுருண்டை ருசிக்காக...சரவண பவனும்,ஆனந்த பவனும்,தலப்பாக்கட்டியும் ,தலைகீழாத் தொங்கி...தவமே பண்ணுதம்மா !ததுங்கிணத்தோம் போடுதம்மா !
தாயே! பெத்தவளே ! உன்னப் பக்தி நானெழுதி ஒத்த வரிப் படிக்கல்லியே ! ஒத்த வார்த்த சொல்ல கூட அப்போதே தோணலியே !
 நீ சோகம் சுமந்த காலத்திலும் உன் கண்ணில் இனித்தவளே! கருணைக் கடவுளே! அகரம் அறியா...சிகரமே ! அன்பின் அகராதியே!
மடியில் சேயுறங்கும் போது...சேலைமுனைப்பால் காற்றைத் தடுப்பாயே...காயம்  படுமோ என்று .....அது என்ன ஆரம்பப் பள்ளியறியா... பல்கலைப் படிப்பு ?
புரியாமலே..போய் சேர்ந்த புண்ணியவதியே! வணங்கியே வாழ்கிறோம் ....வாழவைத்த தெய்வமே ! நன்றி!

வேண்டும் வரம் :

கருணையற்ற ஏய் காலனே.....முன்னோக்கி எனைநடத்தி முதுமையாக்கும் நீ.....பின்னோக்கி எனையிழுத்து மீண்டும் பிள்ளையாக்கக் கூடாதா?
கட்டில் கண்டு கிடந்தாலும், காதோரம் நரைத்தாலும்,தொட்டில் தந்த மனம் மட்டும் தொடர்ந்துவரக் கூடாதா ? இது வரை நான் செய்த பிழையெல்லாம்,கண்ணீரில் கலைந்து தொலைந்து போகக் கூடாதா?
கண்ணாடி பார்த்து முகம் கண்டறிதல் போல்,கண் பார்த்தே மனித மனம் கண்டறியக் கூடாதா?
ஆசையற்ற மனம் வாங்கி,அழிவற்ற உடல் வாங்கி,ஓசையற்ற ஓருலகில் ஒதுங்கிவிடக் கூடாதா?வாழ்வோடு வருந்தாமல், முடிவிற்கு முன்னாலே ,இரண்டுக்கும் இடையே நான் இளைப்பாறக் கூடாதா?
முட்டி  முட்டி அந்தியிலே பெறும் ஞானம்,வாழ்வின் ஆரம்பத்திலேயே வந்தருளக் கூடாதா?
போட்டிப் பொறாமைகளைப் புறந்தள்ளிச் சிரித்துவிட்டு,நீட்டியேப் படுத்து மனம் நிறைவுபெறக் கூடாதா?
வட்டங்கள் சுருங்கி வரும் வாழ்க்கைக்கு ள் சிக்காமல்,வெட்டவெளி போலே நான் விரிந்து கரைந்து போகக் கூடாதா?
விருட்சமாகப் போகும்  விதை போல, அறிவனைத்தும் அடக்கி வைத்து அருளி வரக் கூடாதா?
நான் அறியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல்,நான் அறியாமலே என் இறுதி நேர்ந்து விடக் கூடாதா ?

நம்பிக்கை:

' கால்களில் முள் தைக்கும் போதும் , கனவுகளுக்கு சலங்கைக் கட்டும் விடாமுயற்சி '

ஞானம் :

' ஆசைகளால் அன்றாடம் அலைக்கழிக்கப் பட்டு அல்லல் படுவதைத் தாண்டி , ஆசைகளை நெஞ்சில் அழித்தொழிக்க அல்லலுரும் விடா முயற்சி '

சுமைதாங்கி :

ஊர் நடுவே நான் இருப்பேன் ! மற்றவர் சுமை தாங்கி,வந்தவர்க்கு ஓய்வளிப்பேன்!தலை சாய்க்க  இடமளிப்பேன்!அசையாமல்,ஆடாமல்,தளராமல்,ஜடமாக நானிருப்பேன்!வெய்யிலுக்குக் குடை வேண்டி,விண்ணப்பம் செய்ய மாட்டேன்! மழை கரைக்க முயன்றாலும் மனதிலே உரம் கொள்வேன்! பயன் படுத்தும் அனைவருமே,நெஞ்சு நெகிழ்ந்தென்னை நினைப்பதில்லை! வேறு பலரோ என்னை ஒட்டி உரசிவிட்டு,ஒதுங்கியே போவார்கள்!கல்லாய்க் காணும் பலரும், நான் உள்ளேக் கசிவதை,உணர்வதில்லை! எனக்கும் சோகமுண்டு,சுமையும் உண்டு!உணர்ந்தவர் யாருண்டு!
தலையில் சுமை தாங்காத வேளைகளில்......தனிமையே எனது சுமை என்பதனை யாரரிவார் ! 😢!!

பிள்ளை வரம் :

என் செல்லக்குட்டிப் பட்டுக்குட்டி என்ன சொல்லடா ! உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதுமில்லடா !
பூமி போல என்னை எண்ணி சுத்தி வரும் சந்திரனே , ஒரு நூறு ஜென்மம் உன்கூட வாழவேணும் மன்னவனே! என் மனதில் வந்தவனே,என் உயிராய் ஆனவனே !

நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாருமில்லையே! இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே!

உறங்கும் வரையில் இமைகளில் இருப்பாய் ! இமைகளைத் தாண்டி இதயத்தில் கலப்பாய்!
உனக்கென நானும் எனக்கென நீயும் ,ஒன்றாக வாழ்வோமே நாம் நூறாண்டுக் காலம் !
இனி உந்தன் அருகில் நிழலாக இருப்பேன் ! உன் பிஞ்சுவிரல் நான் பிடித்துத் துணையாக வருவேன் !உனக்கென தானே உயிரையும் சுமப்பேன் ! என் பேச்சும் மூச்சும் இனி என்றுமே நீதானடா!

என் செல்லக்குட்டிப் பட்டுக்குட்டி ........!

கடிகாரம்:

கால்களில் தைக்காத கடிகார முட்களே...நீங்கள்தான் காலத்தின் கால்களோ?
ஓயாது ஓடும் நீ......உழைக்க ஓர் உதாரணமோ?உன் கால்களில் ஒன்று ஏன் குட்டையாய் உள்ளது? ஓ !வாழ்வினில் வரும் ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டதானோ?
ஏய்! காலச்சக்ரவர்த்தியின் கணக்குப் பிள்ளையே.....உன்னைக் கட்டி வைத்தவர்களை, ஓட ஓட விரட்டுவது நியாயமா? சுறுசுறுப்புகள் உன்னை ,ஏன் அவசரக் குடுக்கையாய் ஓடுகிறாய் என்றும்......சோம்பேரிகள் உன்னை ஏன் நகரமாட்டேன் என்கிறாய் என்றும்...... சொன்னால் நீ யார்ப் பேச்சைக் கேட்பாய் பாவம் ! நீ கவலை கொள்ளாதே!உன் பெருமை ஆகாயம் போல!அந்த பூமிப் பெண்ணே ....சுற்றும் ,சந்திரனையும்,சூரியனையும் முட்களாகக் கொண்டக் காலத்தின் கடிகாரமல்லவா!உன் வர்க்கம் .....உறவு! பெருமை கொள்! மகிழ்ச்சி பெறு! வாழ்க !

போதிமரம் தேடி .....!

நெருப்பாய்க் கொளுத்தும் கோடை வெய்யில் சாலையில்,கால்கள் தகிக்க,கண்கள் எரிய,தலை வேக,விசிறிக் குடை பிடிக்கும் மரம் தேடி மனம் அலைய,நாக்கு வரண்ட நொடியிலே......கண்டேன் ,தொலைவினிலே ஓர் ம(வ)ரம்! ஒற்றைப் புளியமர ஓரம் தந்த நிழல் ஓர் ஆச்சரிய இ லவசம்!
கடைத்தெருவில் ஓடிக் காலொடிந்தப் பூங்காற்றும்,நிழல் தேடி நொண்டியடித்தங்கே வந்ததும் என் வரமே!
பிள்ளைச் சிரிப்பும்,பிறைமதிபோல் புன்னகையும்,வெள்ளை உடையும்,வெளுத்த தலையுடனும்,சித்தரைப் போலொருவர்,சிரித்தபடியங்கு வந்தார்!
' புத்தரடா 'நான் என்றார்! போதிமரம் போகாமல்.... புளியமரம் வந்தது ஏன் என்றேன் ? இதன் கீழே நிழல் கிடைக்கும்,ஞானம் கிடைக்க மார்க்கமில்லை ' என்றுரைத்தேன்!
'பார்த்தால் இளைஞன் நீ,பக்குவமாய்ப் பேசுகிறாய்.ஆனாலும் உன்னிடத்தில் ரகசியங்கள் அவிழ்வதனை ரசிக்கவே செய்கின்றேன்! ஆயிரம் ஆண்டுகள் போனபின்னே,போதிமரம் மீண்டும் காண பூமி வந்தேன்! ஊரெல்லாம் சுற்றி ,உலா வந்ததில்,நான் கண்டதோ.....,மாடுகளாய் வாழும் மனிதர்கள் கண்டேன்!இல்லறத்தில் இனிமை காணாது,துறவரத்தில் உண்மை காணாது,நல்லறத்தைப் பேண நாதியற்ற சமூகம்  கண்டேன்!தாலிக்கயிறுகளில் ஆரம்பிக்கும் தாம்பத்தியம் கூட தடுமாறி,தடம்புரளும் அவலம் கண்டேன்!பொய்யே, தேசத்தின் பொதுமொழியான வேதனை கண்டேன்! லஞ்சமும்,போரும்,வணிக மருத்துவம்/கல்விதனைக் கண்டேன்! காணும் துயர்க் கெல்லாம் காரணம் நானறியேன்!அன்றொருநாள் எனக்கு ஞானம் வழங்கிய போதிமரம் மீண்டும் காண அலைகிறேன், நண்பா,வழி சொல்ல முடியுமா உன்னால்?
தேடியே அலைந்தோம்,திசைதோறும் திரிந்தோம்! போதிமரமோ கிடைக்கவில்லை!புத்தர் தளர்ந்தார்!
புன்சிரிப்பாய் நானுரைத்தேன்!

பொருளாதாரத்தில் பொதுவுடைமை!உறவுகளில் உண்மை!சமூகத்தில் சம உரிமை கிட்டும்வரை சங்கடங்கள் ஓயாது!வர்க்கங்கள் இரண்டாக வாழும் வரை,பூமியெங்கும் போர்க்களமாய்த்தானிருக்கும்!புரிகிறதா!
வியந்தேபோன அந்த மகான்.....இந்த ஞானம் நீ பெற்ற வழியென்ன ? எனக் கேட்டார்?
மனிதகுலத்தின் மாபெரும் உத்தமனே......சொல்கிறேன் கேள் :
வாழ்க்கை தந்தப் பாடத்திலே,வந்ததிந்த ஞானமய்யா!என்னுடைய போதிமரம் என்றுமே என் எதிரிலய்யா!

வேண்டும் !வேண்டும் !

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும் !
எழுத்தெல்லாம் சுடராகி ஒளிர வேண்டும் !
வண்ணங்கள் காணுகின்ற வாழ்க்கை வேண்டும் ! வயதுக்குச் சரியான பேச்சு வேண்டும் !
கண்ணீரில் சுகங்காணும் ஞானம் வேண்டும் ! செய்வன யாவற்றிலும் மகிழ்ச்சி வேண்டும் ! சொன்னபடி கேட்கின் உள்ளம் வேண்டும் ! சொன்னால் தான் சாகின்ற தேகம் வேண்டும் !கண்ணோடு கண்பார்த்துப் பேச வேண்டும் ! கருதுவதை உரைக்கின்ற துணிவு வேண்டும் ! எண்ணங்கள் பகிர்கின்ற நட்பு வேண்டும் !எதிலுமே சிரிக்கின்ற பக்குவம் வேண்டும் !வெறுந்தரையில் படுத்தாலும் உறங்க வேண்டும் ! கவிதைகள் நயம் கண்டு ரசிக்க வேண்டும் ! மேகம்போல் பொழிந்துவிட்டுக் கலைய வேண்டும் !

நீ உருவான கதை :

( மருத்துவர் திருத்தவும் )

நான்காம் வாரம் : தண்டுவடம்,நரம்பு மண்டலம் உருவாகும் தருணம்.மழலை அளவு,ஆறு மில்லிமீட்டர்,அதாவது ,கால் அங்குலம்!
ஐந்தாம் வாரம் :ஒரு குண்டூசிக் கொண்டை அளவு தலை ,நான்குப் புள்ளிகளுடன்,கண்கள்,காதுகளுக்கு.
ஆறாம் வாரம்: வாய்,ஜீரண மண்டலத்துடன், இருதயம் உருவாகும்.
ஏழாம் வாரத்தொடக்கத்தில் இருதயம் துடிக்க ஆரம்பித்து வளரும் உருப்புகளுக்கு ரத்தம் அனுப்பியாக வேண்டும்!
எட்டாம் வாரம் ,மழலை அளவு அரை அங்குலம்.அதில் முகம்,கை,கால்கள் முளைக்கும்! பிண்டம் மனித அடையாளம் பெறும்.நரம்பு மண்டலம் முழுமை பெற்று,நாக்குமூக்கு,நுரையீரல்,குடல்,கல்லீரல் ,சிறுநீரகம்,பாலுறுப்பு உண்டாகும்.
பனிரெண்டாம் வாரம் :
மனித உருவத்தில், தலை மட்டும் பெரிதாக.கண்ணிமைகள்,காதுமடல்களுடன்,கைகால்களை அசைத்துப் பார்க்க வேண்டும்!பனிக்குடத்தில் ,நீர் அருந்தி,சிறுநீர்க் கழித்துப் பார்க்கிறது!system test !
பதினாராம் வாரம் உடல்முடியும்,இருபதாம் வாரம் தலைமுடியும் வளரும். மூட்டுவளரும்,ஆண்பெண் வித்தியாசம் உறுப்புகளில் உருவாகும் தருணம்.விழி திறக்காவிடினும்,விரல் சூப்பும்.பிறந்தபின் தாய்ப்பால் பருக,ஒத்திகை.
இருபத்திநான்காவதில் கண்விழிக்கும்,சுவை உணரும்,ஒலி கேட்கும்,கொட்டாவி விடும்.
28ம் வாரம் மூளை பெருவளர்ச்சி பெறும்.
38ம் வாரம்,நகம் முளைக்கும்,பெண்ணுறுப்பு படியும்,ஆண்சிசு விரையிரங்கும்.
இதோ,குழந்தைத் தயார்,தாயாரிடம்.சிற்ப கிரகம் கர்ப்பக் கிரகத்திற்கு விடை சொல்லும் விதம்........ தலைகீழாகத் திரும்பித் தாயாருக்குப் பிரசவ வலியாக......!.ஒன்றாக இருந்ததால் ..... இரண்டாகப் பிரியும்,பிரிவின் வலி......தாயும்,சேயும் அழுகுரல் ஒசை.....தந்தைக்கும்,தாயின் தாய்க்கும் யாழாய் இசைக்கும் !

- இதுவே நீ பிறந்த கதை. வாழ்க!

கண்ணதாசனின் கற்பனை வரிகளில் மனிதனும் இறைவனும் :

மனிதன்:
படைத்த நின் படைப்பில் யாவும்,பரிணாம வளர்ச்சியே கண்டோம்!ஆனால்  இன்று விதவித குணங்கள் தோன்றித் துன்பமுறும் அவஸ்த்தையை அறிவாயா நீ? அதனால் தொடக்கத்தில் நீ வகுத்த அடித்தளமே ஆட்டங்கண்டதன்றோ?நின் பதில்தானென்ன?இந்நிலையில் வாழும் வாழ்வில் நிம்மதி வரும் வழி சொல்வீரா?

இறைவன் :

கண்களை வெளியே வைத்தேன்!காதோடு,நாசி,வாயைப் புறத்தே வைத்தேன்! பண்படும் மனம் மட்டும் பதுக்கி உட்புறம் வைத்தேன்! உள்ளத்தை உள்ளே வைத்த ஒரே தவறால் தானே,உள்ளத்தில் கள்ளம் வளர்த்ததைக் காண வழியின்றி,உதட்டை நம்பி நட்டமுறும் நிலையானதோ! போடும் வேடம் வளர்ப்பானென நானறியேன்! உண்மை பள்ளத்தில் பதுங்கும் வண்ணம் பாவிநான் பிழையே செய்தேன்!கண்மட்டும் பரிவுகாட்டி,கனிந்த சொற்கருணை காட்டுமென கனவிலும் நான் காணேன்!
உன்தலைமுறையில் உலகமழியும் ஓர் நாளில்,என்தலைமுறையில் மீண்டும் இயங்கும் அந்நாளில்...இன்னுமோர் மனிதஜாதி இயற்கைப் படைக்கும் அத்தருணம், இன்னொருமுறை ஒரு  தவறு இனி செய்யேன்!இதயத்தை மறக்காமல் முகத்தில் வைத்தே ,நான் செய்த பாவத்தின் பரிகாரம் காண்பேன்!

பாடல் நயம் :

ஓல ஓல குடிசயில ஒண்ட வந்த சீமாட்டி,ஒன்ன நான் வச்சிருப்பேன் உசிருக்குள்ளத் தாலாட்டி! ஆறு காஞ்சபோதும்,அன்புல நீ நீராடு!சோறு இல்லனாலும்,சொந்தமிருக்கோம் உன்னோடு! வா  சீக்கிரம் பூவோடத்தான்,நான் இப்பவே ஓங்கூடத்தான்!

வாசலிலக் கோலமிட ஆசைப்பட வேண்டாமே!வாசலே இல்லா வீட்டில் பூசனிப்பூ நீதானே!வைரத்துல தோடு செஞ்சு போட்டுவிட வேணாமே! வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே!வேர்வையில நூலெடுத்து, சேலை நெஞ்சு நான் தருவேன்!வெட்கப்பட்டு நீ சிரிச்சாக் கட்டிக்குவேன்!கூடிக்கலஞ்சப் பிறகும் ஏன் பாசம் ஊறுதே?ஏறும் வெய்யிலப்போல சந்தோசம் கூடுதே!மாசம் சிலப் போனதுமே,மாணிக்கமா ரெட்டைப் புள்ள,ஒ ண்ணா நீ பெத்துத் தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்! பெத்தெடுத்தப் பிள்ளைகள ரத்தினம்போல் ஆக்கணுமே! இங்லீஷுப் படிக்கவெச்சு,ஏரோப்ளேனு ஏத்தணுமே!துணையா சேந்திருந்தா,நள்ளிரவும் வெள்ளி வரும்!தும்மலிடும் சத்தத்துக்கே சாமி வரும்!வாழ வேணும் நாம மழைக்காத்து பூமியா!ஆசைத்தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா?

கவலையும்,பயமும் என்னைக் கட்டிப் பிடித்துக் கட்டிலில் கிடத்தியிருந்த வேளை,தயங்கித் தயங்கி ஓர் ஓரமாய் உட்கார்ந்திருந்தது.... நம்பிக்கை!
நகராதிருந்த நம்பிக்கை,என் நிலை காணப் பொறுக்காது....' உள்ளே வரட்டுமா,உதவ ' என்றே கிசுகிசுக்க......பயமும்,கவலையும் பஞ்சினைத் தேடின,என் காதுகள் அடைக்க,கனத்த முயற்சிகளுடன்! குறுக்கீடுகள் தாண்டி உரத்த குரலில் கொடுத்தது,நம்பிக்கை!நண்பா.....விழித்து நீ என்னுடன் எழுந்தால்,விலங்குகள் தானே நொறுங்கும்,புண்ணுக்குப் புன்னகை தடவி,நம்பிக்கை,சொன்ன வார்த்தை மின்சாரம்,நரம்புகளில் பாய்ந்தது!
கவலை,பயங்களை.....ஓரம் விழும்படி,உதறியே எழுந்தேன்! நம்பிக்கை ப் பாய்ந்து வந்து என்னை ஆரத்தழுவிய நேரம்,ஏவிக் கொண்டிருந்த ,கவலையும் பயமும்....எடுபிடி வேலை எங்களுக்குச் செய்யத் தொடங்கின.....வேறு வழியின்றி!தேநீர் வழங்கிய.....கோப்பைகளைக் கழுவச் சென்றன......கவலையும் பயமும்!
சுபம்!

ஆக,
நம்பிக்கை துணை கொண்டு, பயம்,கவலை நீக்கி,
பண்டிகைக் கொண்டாடி மகிழ்வோமாக ! 😀!!

பொதுவாக,எதை நாம் ஏராளமாக அறுவடை செய்ய விரும்புகிறோமோ, அதை விதைத்தால் தானே,அது சாத்தியமாகும்.நெல் கிடைக்க நெல்லை விதைக்க வேண்டியது அவசியம் அல்லவா?
அது தானே இயற்கையின் விதி!

ஆக, மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ,அதை அவர்களுக்குச் செய்தபின்,எதிர்ப்பார்ப்பதுதானே.....நியாயம் !

என்னங்க நான் சொல்றது?வெறும் எதிர்ப்பார்ப்பை மட்டும் வளர்த்துகிறது நியாயங்களா?

     - தென்கச்சி கோ.

' எல்லோரும் இந்நாட்டு மந்திரி '

அடிக்கல் நாட்ட அமைச்சர் வந்தார் ! தெருவுக்கெல்லாம் தீபாவளிதான் ! வெளிச்ச வெள்ளம் வீதியெல்லாம் ! ஒரு நாள் கூத்து முடிந்தது! மறுநாள் மறுபடி அமாவாசை இருட்டு தெருவெங்கும் ! எரியாத தெருவிளக்கடியில் மட்டும் பீடி வெளிச்சம் ! வாழ்க ! பீடியும்,பிடிப்போரும் !
மையிருட்டைத் தவிர்த்ததற்காக ! இரு குரல் மட்டும் இருட்டில் !' மந்திரி ,கைதட்டல் பெற்றுப் பேசினாரே,எ ல்லாரும் இந்நாட்டு மன்னராமே ! '

" மன்னருக்கேதப்பா மரியாதை இந்நாளில் ! எல்லாரும் இந்நாட்டு மந்திரி ஆவதெப்போ ?

 வாக்களித்தவன் விரலில் வைக்கும் கரும்புள்ளி,பின்னால் அவன் முகத்தில் பூசவிருக்கும் கரிக்கு ....முன்னுரையல்லவா "

இறைவா.....!

உன்னிடம் கேட்பதோ சிறிது:
கண்ணீர் கொடு.....பிறர்க்குச் சிந்த!
வேர்வை கொடு....எமக்குச் சிந்த!
சக்தியுள்ள/சந்தர்ப்பமுள்ள பொழுதிலும்.....ஒழுக்கம் காக்கும் உள்ளம் கொடு!தாங்கமுடிந்தத் தோல்வி கொடு!கர்வம் கலக்கா வெற்றி கொடு!மேகங்களும்,கவிதைகளும் அழைத்தால் பொழியும் மழை கொடு! பிடித்த இசையோடு வீசும் காற்று கொடு!மேகத்தின் இடியோ,செய்யாப் பழியோ..... தலையில் விழாத் தடுப்பு கொடு!எல்லோரும் சிரிக்கின்ற வாழ்வு கொடு! எதிரியும் எனக்கழுகும் மரணம் கொடு! அதுவரை வாழ்வின் கோப்பைகளைக்,ஊற்றும் போதே உடைக்காமல்.......நிறைந்த பிறகும் வழியவிடு !

பகிர்ந்து கொள்ளும் துணிவு,பக்குவம் வளர்ப்பதோடு,பாரம் குறைத்து,பல சமயம் கைகொடுக்கும்! பலரைப் படைத்தாலும்,பதப்படுத்தி மேம்படுத்த சிலரைத்தான் தேர்ந்தெடுத்து சோதிக்கிறான் அவன்! அதை சமாளித்து மீண்டுவிட்டால்,இரண்டு லாபம் காத்திருக்கும்!ஒன்று ,இனி அவன் கைவிடமாட்டான்!அடுத்து,மற்ற அன்றாடப் பிரச்சினைகள் எளிதாகிவிடும்,தாங்கும் சக்தி கூடிவிட்ட காரணத்தால் !இவையாவும் அனுபவம் அளிக்கும் பாடம்!வாழ்வியலில் முன்னேறும் படிகள்! ஞானம் பெறும் வழிகள்!வரங்கள்! வாழ்க!

வர்ஷா birthday

வருடந்தோறும் ஆண்டுகள் வந்து போகும் ! வர்ஷாவும் அதுபோல இங்கு வந்து செல்லவும் ! அன்பான வேண்டுகோள் அதுவன்றி வேறேது!அனைவரின் எதிர்ப்பார்ப்பும் ,அனைவரின் சார்பாகவும்! பிறந்த மண்ணும் ,தேசமும் வரவேற்கக் காத்திருந்தது வாடுவதை அறியாயோ ஆங்கிலமே! குடும்ப ,திருமண வரிசையில் அடுத்தப் பெண்குழந்தை நீயல்லவா?நன்மைகள் யாவும் காலத்தே நீ  காணவும் , வாழ்வினில் உயரவும் வாழ்த்துக்களும்,ஆசிகளும் ! பிறந்தநாள்,போதிய மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் வழங்குமாக !
WISH YOU A VERY HAPPY BIRTHDAY!!

ஆவி போகும் வரை ,காத்திருக்குது அன்பு

அந்த கிராமத்தில் ஓர் இந்து வாலிபன் மற்றும் ஒரு கிருத்துவக் கிளி.ஒரு நாள் அவர்கள் பார்வை உரச,மலர்ந்தது காதல்.ஒரே நொடியில் விதைத்து,முளைத்து,விருட்சமாகிவிடும் .... மரம் இது ஒன்றே!மாதாகோயிலில் மேரி அந்த ராஜாவுக்காக ஜெபிக்கிறாள்!அம்மன் கோவிலில் அவன் மேரிக்காக அர்ச்சனை செய்கிறான்!மேரியின் அண்ணன் ஆல்பட் தங்கையின் காதலறிந்து ,ஆதரிக்கிறான்! இங்கு தான் ஆபத்து முளைக்கிறது!இரு குடும்ப மனிதர்கள் மதம் பிடித்து மதவாதிகளாகி ....கிளிகள் சிறகொடித்து சிறை வைக்கிறார்கள்!மதவெறியர் மனம் மாற ஆல்பட் ஓர் நாடகம் அரங்கேற்றுகிறான்.காதலர்களை இறந்தவர்களாக நடிக்கச் செய்கிறான்!அவன் எதிர்பார்ப்பின்படி,பெற்றோர்கள்....இப்படி நேரும் எனத் தெரிந்திருந்தால் திருமணம் செய்துவைத்திருப்போமே என்று கலங்குகிறார்கள்!
இதற்காகக் காத்திருந்த ஆல்பட் அவர்களை எழுப்புகிறான்!ஆனால் அந்த இளம் குருத்துக்கள் நிஜமாகவே....... ஐயகோ...... பெற்றோரைப் புண்படுத்தி நாங்கள் வாழ விரும்பவில்லை என்று ..அவர்கள் எழுதிவைத்திருந்த கடிதமொன்று....கதறியபடிப் பேசியது.ஆல்பட் இடிந்தான் !ஆவிபோன பின்பு.....அழுது பார்க்குதிங்கு அன்பு !!😢!!

சிந்தனை:

' சிகரம் அடைவது சிறு விஷயமன்று '

வாகனம் ஓட்டுவது என்று வந்த பிறகுப் போக்குவரத்து நெரிசலை ஏற்றே ஆக வேண்டும்! உடல் ஆரோக்கியம் தேவை என்றால் நாக்குக் கேட்பதையெல்லாம் அதற்குத் தரமுடியாது! வருமானம் என்றால் வரியும் உடன் வரும் ! வாழ்வில் நன்மைகளோடு வரும் தீமைகள் தவிர்க்க முடியாதவை!
முட்களற்ற ரோஜாவைத் தேடுவது  எவ்வளவு மடத்தனம் ? பிரச்சினைகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பதும் அவ்வாறுதான்! அப்படி ஓர் வாழ்க்கை அகராதியிலும் கிடையாது !வெறுமனே வாழ்க்கையை மட்டும் ஓட்டினால் போதும் என்று நினைத்தால் ஒருவேளைப் பிரச்சினை குறைவாக இருக்கலாம் !

 சிலையாகத் துதிக்கப்பட ....உளிவலியைத் தவிர்க்க முயன்றால் எப்படி ?சிகரத்தை அடைவது சுலபமில்லை!வரலாறு படைப்பது..... வரலாறு படிப்பது போல் எளிதல்ல!
தங்கத்தை தூய்மையாக்கத் தீயிலிட இன்றியமையாதது! வாழ்க்கை, உங்களை ஒன்றும் எரிக்கச் சொல்லவில்லை...... ஜொலிக்கச் சொல்கிறது! புரிந்து கொண்டால்.....பூலோகம் நமக்குக் கீழேதான்!!!

கதாசிரியர் : அப்போது அவனுக்கு சிறுவயது !
கவிஞர் :
அப்போது அவனுக்கு
கூழாங்கல்லில் நடந்து,வைரங்களைக் கனவு கண்டு கொண்டிருந்த வயது!

கதா: வேண்டியவற்றை கற்பனையில் பெற்று வாழ்ந்த நேரம் !
கவி: செருப்பில்லாத பாதங்களோடு நடக்கும் போதும் ,சிவப்புக் கம்பளக் கற்பனை செய்து கொள்ளும் மமதைக் காலம்!

கதா: ஏழ்மையிலும் பணக்கார நினைவுடன் வாழ்ந்தான் !
கவி:
இந்த பூமியின் இயவரசனாகவும் , தற்காலிகமாகப் பிச்சைக்கார வேடத்தில் இருப்பதாகவும் நினைப்பு!

கதா: இதுதான் என்றில்லாமல், எல்லையற்ற யோசனைகளில்  காலம் கழிந்தது!
கவி:நட்சத்திரங்களின் சிமிட்டல்களைக் கூட,...வானம் தன்னைப் பார்த்துக் கண்ணடிப்பதாக எண்ணிக்கொள்ளும்,ஒரு பூனையைப் போல....எல்லாக் கண்களும் தன்னையே மொய்ப்பதாகத் தனக்குள் ஒரு கனா போதை.......

கதா: பள்ளியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் செய்தி வாசிக்கும் பொறுப்பு வந்தது!
கவி: பள்ளியில் காலைக் கூட்டத்தில் செய்திவாசிப்பதை அவன் சிலுவைச் சுமையாக எண்ணாமல்,ஒரு மலடியின் கர்ப்பச்சுமையாக நினைத்து மகிழ்ந்தான் !

உறவுகள்:

அவர் ஒரு முயல் வளர்த்தார் ! முயலோடு செலவிடும் நேரம்,வாழ்வின் வரவானது!வெல்வெட் உடம்பில் விரல் கோதுவார்! குறுகுறு கண்களில் , குழந்தை காண்பார்!புல்கொறிக்கும் பற்களில் விரல் வைத்துக் கடிக்கச் சொல்லி மன்றாடுவார்! அதன் இருகாதுகள் இணைந்தாடுவதில்,தன்னை மறப்பார் ! கோதுமை பார்லி துடைத்த கேரட் துண்டுகள்,முட்டக்கோஸின் முற்றா இலைகள் ,பரிவோடு ஊட்டுவார் !தான் பருகும் தரத்தில் தண்ணீர்த் தருவார்!அவர்க் காலடி ஓசையில் காது குவித்து,தன்னை அடையாளம் கண்டு,ஒலியெழுப்போதெல்லாம்,எஜமான் பெருமையில் நிஜமாய் மகிழ்வார்! மனிதனைவிட பாயின்ட் ஒன் பாசம் அதிகம் என்றுணர்வார்! அது வாழ்வின் அன்றாட பாகமாயிற்று! நாட்கள் சென்றன!பாலூற்றி வளர்த்த பிறை,முழு நிலவாயிற்று!

அந்த நாளும் வந்தது!

முயல் வளர்த்த, விஞ்ஞானி , மூக்கோடு மூக்கு வைத்து முத்தமிட்டார்!

ஒரு காது பற்றி உயரே தூக்கினார்!

இனப்பெருக்க உறுப்பு வழி......எய்ட்ஸ் கிருமி ஏற்றினார்!

சிலநாளில் அது கசங்கிய காகிதமாய்ச் சுருங்கியது!

பின்னொரு நாள் மயங்கிய முயல் தூக்கி மாற்று மருந்தேற்றினார்!

ஒரு ஞாயிறுப் பிற்பகலில் அந்த வெள்ளி ஓடை,அசைவதை நிறுத்திக் கொண்டது!

துக்கமுற்றார் விஞ்ஞானி,மருந்து செத்துப் போயிற்றே என்று மட்டும்!

சோதனையே வாழ்வாய்,வாழ்வே சோதனையாய்....குணம் வற்றிப் போன,குடும்ப உறவுகளில்,நம்மில்,
யார் விஞ்ஞானி ??
யார் முயல் ???

ஒரு நகரவாசியின் புலம்பல் :

சலித்து விட்டது!இத்தனை வருட நகர வாழ்க்கையில் ஒரே மாதிரியான இயந்திர வாழ்வின் சம்பவங்களால் நான் அலுத்து விட்டேன்! செவிப்பறை கிழிக்கும் இரைச்சல்கள்!காற்றை விஷமாக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகைகள்,வருஷமெல்லாம் நிறைமாத கர்ப்பிணியாக போக்குவரத்துச் சாலைகள்!குடியிருப்புகளில் யாருக்குமே அடுத்தவீட்டு எண் தெரியாத அந்நியங்கள்!செக்குமாட்டுச் சிந்தனைகள்! சிதிலமாகிப் போன ரசனைகள்!

இதயத்தில் என்னென்ன வேட்கை!இது இடைவேளை இல்லாத வாழ்க்கை! வாழ்வோடு போராட்டம் இங்கே! இதில் வாழ்கின்ற நிமிடங்கள் எங்கே?

நான் போகப் போகிறேன்!ஓசையற்ற ஓர் உலகம் காண! என்னுள் இறந்து கிடக்கும் மனிதனை எழுப்பப் போகிறேன்!மூளையால் வாழும் வாழ்க்கை விட்டு,இதயத்தால் வாழும் வாழ்க்கை நோக்கிப் போகிறேன்!

கழுத்தில் கிடக்கும் மச்சம் மாதிரி,மலைச்சரிவில் ஓர் கிராமம்!மலையின் ரகசியத்தை முனுமுனுத்துக் கொண்டு ,குதித்தபடி சலசலப்பு சங்கீதத்துடன் ஆடிஓடும் நதி!அந்த நதிக்கரை இருபுறமும் பச்சைபசேல் என்று கண்களைக் கட்டிப் போடும் விருந்து!ஓயாமல் அடிக்குதிங்குத் தென்றல்! ஒயிலாக இடுப்பு வளைத்து ஆடுதிங்கு ஆறு! சாயாமல் இருக்கின்ற தென்னை! தமிழ் பேசி வரவேற்குதே என்னை!மலைதொட்டு அடிக்கின்ற சாரல்! எந்தன் மடி தொட்டு நனைக்கின்ற தூறல்! தூரத்தில் நதியோடும் சத்தம்! என் துயரத்தில் பங்கேற்கும் நித்தம்! என்னோடு குயில் பாட வேண்டும்! அந்தக் குயிலோடு நான் பாட வேண்டும்!கண்ணோடு இமை மூட வேண்டும்! நான் காற்றோடு ஸ்ருதி சேர வேண்டும்!

மகள் ரூபாவின் பிறந்தநாள் வாழ்த்து

மகளே,மரகதமே!மண்ணில் விளைந்த பொன் தாமரையே! பொருள் வளர்க்கும் மீதினியில் குணம் போற்றும் குலமகளே! எந்நிலையிலும் சிரிக்கத்தெரிந்த ஜீவனுள்ள எங்கள் சிற்பமே!நாங்கள் ஈன்ற நந்தவனமே! தடாகமே வியக்கும் தாமரையே! காற்றில் கண்டெடுத்த... தேனிசைத் தென்றலே!உன்னால் பெருமை பெற்ற பெற்றோர் நாங்களே!

வயலின் மீட்டி இசைத்திடுவாள் உந்தன் மகள்! அந்த ஸ்வரங்களில் மயங்கியே லயித்திருப்பாள் எந்தன் மகள்! தங்கம் வேண்டாம்,தாய் வேண்டும் என்பான் உந்தன் மகன்! அதைக்கேட்டபடி ரசித்திடுவார் எந்தன் (மரு)மகன்!

உங்களுக்கெல்லாம் அங்க ஒரு ஒபாமா,மிச்சேல் ஒபாமா ! எங்க சார்பா உங்களுக்கு,அவுங்க ஒரு நல்ல அப்பா,அம்மா!

போதுமாம்மா?

இன்று பிறந்தநாள் காணும் நின் பண்புகள்,எனக்கு எழுத்துக்களோடு சரி!குறை காணா குணம் வளர்க்கும் குற்றாலமே!நீ வாழ்க!நின் குடும்பம் நிதமும் மகிழ்ச்சியுடன் வாழ்க!
பல்லாண்டு வாழ்க! பல வளமும் பெறுக! வாழ்க! வாழ்க!என அன்பு கொண்டு வாழ்த்தி மகிழ்கிறோம்!
_HAPPY BIRTHDAY_!😀!!

நாங்கள் யார் தெரியுமா?

நாங்கள் கழுத்துவரை ஆசைகள் வளர்த்து, கனவு நீரில் நீந்திக் கொண்டு ,தரையில் தவித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும் உல்லாச மீன்கள் !மேகம் ஆங்காங்கே தனித்து மழையாகப் பொழிந்த போதிலும்,ஓடிச் சென்று கடலில் கலந்து ஒன்றாக வாழ்ந்துக் காட்டினாலும்....அது எங்களை ,பாதிக்காத வகையில்,தனித்தனியாகவே வாழ்ந்து கொண்டு,தனிமையில் இனிமை காணத் தெரிந்தவர்கள் நாங்கள்!எங்கள் வழி .....தனி...   ..வழி!
வீட்டைச் சுற்றி நீரோடை இருக்கும் போதும்....தாகம் வரும் போதெல்லாம் வானத்தையேப் பார்த்துக் பழகியவர்கள் நாங்கள்!எங்கள் வாழ்க்கை மூளையோடும்,வயிரோடும் முடிந்து போனால் என்ன?இதயம் நோக்கி ஏன் உயர வேண்டும்?பொற்காலச் சிகரத்தில் ஏற ,புஜம் கொடுக்க எத்தனிக்கும்  மரச்சுற்றமே....கற்காலப் பள்ளத்தில் கிடந்தே மடிவதெங்கள் லட்சியமென்று தெரியாதா?மடிநிறையத் தங்கக் காசுகள் இருந்தும் பிச்சைக்கார வாழ்வில் உள்ள சுகம் பற்றித் தெரியுமா?
எங்கள் உலகம் ஒரு தனித்தீவு!அது எங்களுக்காக மட்டும் படைக்கப் பட்டது! இவையெல்லாம் எப்படிப் புரியும் மற்றவர்க்கு?

கதாசிரியரும் கவிஞரும்

கதாசிரியர்:அவன் ஓடிச் சென்றுப் பட்டாம் பூச்சிப் பிடித்தான்!
கவிஞர்:
தேன் குடித்த மயக்கத்தில்,தன்னை மறந்திருந்தது,ஒரு வண்ணத்துப் பூச்சி ! தூங்கும் குழந்தைக்கு நகம் வெட்டும் தாயாய் அதன் உறக்கம் கலையாமல் அதன் இறக்கையைப் பிடித்தான் !
கதா:காற்றே வீசவில்லை!
கவி:மரத்தின் இலைகள் கூட , சாவி கொடுக்காத கடிகார முட்களாய்ச் சட்டென்றே நின்றன! காற்று,தன்னை நிறுத்திக் கொண்டது!
கதா:உலகம் கசந்தது!
கவி:பிள்ளை வயதுக் கண் கொண்டு - இந்தப் பிரபஞ்சத்தைக் கொஞ்சம் காணத் தவறியதால்.... அவனுக்கு இந்தப் பூவுலகம் பாரமானது!
கதா:அவன் அறிவுரை நாடி,ஒரு குருவிடம் சென்றான்!
கவி: மனம் குழம்பிய நிலையில்,ஒரு சாதுவைத் தேடிச் சென்றான்! சிந்தனைத் தெளிவு பெற்று இனிதே வாழ வழியுண்டா?என வினவினான்! அவர்...விளக்கமளித்தார்:துக்கம் கொண்டது கால் ஆயுள்!தூக்கம்கொண்டது கால் ஆயுள்!ஏக்கம் கொண்டது கால் வாசி! இதில் மிச்சமிருப்பதோ மீதி வாசி!அதில் , துருப்பிடித்துப்போன புலன்களை துடைக்க வேண்டாமா?நீ தவரவிட்ட,இன்னும் வாழப்படாத ஒரு வாழ்க்கை உள்ளது!அதைச் சிறப்பாக வாழ.... வாழ்ந்து காட்டுபவர்களைத் தேடி கண்டு கொள் ! வாழும் காலம் ஒரு முறை ! இதுவரை இழந்த வாழ்வை இன்றாவது மீட்டுக்கொள் !பொழுதைப் பொன் கொடுத்து வாங்கியிருந்தால் ,
வீணடிக்க மனம் வருமா?இந்தப் பூமியில் பிறந்ததற்காகவும் ,அதில் மனிதப் பிறவியாய்ப் பிறந்ததற்காகவும் ,அதில் ,இந்தக் குடும்பத்திலும்,சுற்றத்திலும் பிறந்ததற்காகவும்,பெருமை கொள்!
இந்த வரத்தை ...தக்க வைத்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்!
கவலையை தூரத் துரத்து!கவிகளை நெஞ்சில் நிறுத்து!தவளை வாழ்க்கை வாழாமல்- சில தவங்கள் புரிந்தே வாழ்! வாழ்க வளமுடன்......!என்றே ஆசீர்வதித்து ,வாழ்த்தி அருள்ந்தார்!

நிலா :
நான் ஒன்றும் நிலாவிடம் கடன் வாங்கவில்லை!கண்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ள!
நிலாவை ரசிக்கப் பிறந்தவன்! அதை  அறிந்த அம்மா, அன்றே , நிலாக் காட்டிதான் சோறூட்ட முயன்றாள்! வளர்ந்தபின் நமக்கு நிலாச் சோறெதற்கு? நிலவே சோறு நமக்கு!
நிலவை முத்தமிடத் தடையேதுமில்லையே!கண்களின் வழியே அருந்தும் மது நிலா அல்லவா! புலன்களை வருத்தா போதை கிடைக்குமல்லவா!நிலா ஒரு இயற்கையின் ஆசீர்வாதமல்லவா!அது ,ஒரு வார்த்தை கவிதையல்லவா!விஞ்ஞானம்,நிலவை ஒரு பாலைவனம் என்கிறது! காற்றில்லா மேடுபள்ளம் என்று கணிக்கிறது!மறக்கப் படவேண்டிய நிஜம்!
பருகும் பால்,பசுவின் ரத்தமென்பது நிஜம்!இந்த உடம்பு,தண்ணீரும்,தாதுக்களும்,உடையும் எலும்புகளும்,அறுந்துவிடும் நரம்புகளும்,அழுகிவிடும் சதையும் கொண்டது நிஜம்!பாசமும்,காதலும் ,நிஜம் மறக்கப் படுவதால்தானே! ஆக ஆன்மா இல்லாத விஞ்ஞான நிஜத்தை மறப்போம்! ஆனால் நிலவின் நிறம் நிஜம்!அது ஏற்படுத்தும் கிளர்ச்சி நிஜம்! உனக்கென துணை புரியும் நிலா,நீ அனாதையல்ல என்றே கூறும்!நிலவின் குளிர்ச்சி உணர்த்துமே தத்துவம்!வளர்ந்து,வளர்ந்து பௌர்னமியாகி,முழுமையடைவதும் , சாத்தியமாவதே எனக் கூறவில்லையா?
நிலவை ரசிப்போம்,கற்போமாக! வாழ்க நிலா!

பசியின் அவசரத்தில் இலையைத் தின்று,ருசியில்லை என்று புலம்பும் மனிதா,இன்னும் பரிமாறவே இல்லை,தெரியுமா?
குறைந்தபட்சம் பொறுமை , அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமாகிறது!ஒரு விதை முளைக்கும் வரை பொறுமை தேவையாகிறது!அதேபோல ,ஒரு குழந்தை முழுவளர்ச்சியோடு பிறக்கக் காத்திருத்தல் தவிர்க்க முடியாததாகிறது!இந்த அவசர உலகில் மனிதன் மறந்துவரும் குணம் பொறுமை! அதனால் தானோ என்னவோ , அனுபவிக்குமுன்பே பறந்து போகத் துடிக்கிறானோ ?

மனிகம்

வேண்டிய ஒருவர் நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் உள்நோயாளியாக பல நாட்கள் சிகிச்சைப் பெறுவதை அறிந்து ,அவரைக் காணச் செல்வதாக....வைத்துக் கொள்வோம்:

A.ஆப்பிளும் ஆர்லிக்ஸும் கொடுத்து யந்திரமாய் திரும்புவது

B.சீரியசாக வைத்துக் கொண்டு கடமையாய் விசாரிப்பது

C.அக்கரையோடு,பார்வையால் நோயாளி தலைகோதி,புன்னகையால் அவர் உடல் வருடி,வார்த்தையால் நலம் பெற நம்பிக்கை ஊட்டுவதா?

அறிவுக்குச் சாணைப்பிடிக்க ஆசைப்படும் உலகம் ,ஏனோ,இதயங்களை ஈரப்படுத்த எண்ணவே இல்லை!

இட்லி

இவை வட்டமானவை, மென்மையாகவும்,வெதுவெதுப்பாகவும் வரவேற்கப் படுபவை! திடப்பொருளாகத் தோன்றி,இளகிய நிலையில் திரவமாக மாறி,வெப்பத்தால் மீண்டும் திடமாக மாறும் தன்மை கொண்டது!குஷ்புவுக்கு உறவு!குடுப்பினை இருந்தால் மல்லிகைப் பூவை ஞாபகப் படுத்துபவை! நோயாளிகளும் எளிதில் ஜீரணிக்கக்கூடியவை!இதன் வண்ணம் கொள்ள ,மனங்களோ ஏங்கும் ! குழந்தைகளை குதூகலப் படுத்தக் குட்டி போடுபவை! தனித்து ஏற்கப்படாத ஜென்மம்!எப்பொழுதும் கூட்டணியை நம்பியே காலம் ஓட்டும் ! சட்னி,சாம்பார் கூட்டணி ஏமாற்றிவிட்ட சமயம் ,மிளகாய்ப் பொடி நல்லெண்ணெய் , நல்ல எண்ணத்துடன் கைகொடுக்கும்!

இன்னும் , நான் யாரா ? யாரங்கே......  ...!😂!!

மூத்திரசந்து

பெயர் வைத்த கதை :

ஆரம்பத்தில் அதன்  பெயர் வேறு , ஒரு வார்த்தையில்! இருபுறம் சுவர் சூழ்ந்த குறும்பாதை எனலாம் ! அதன் பலகீனம் சந்தைக்கு அருகில் இருப்பதே! நின்றபடியே ,காதில் பீடி செருகிய ஆடவர் ,பழக்கூடைப் பெண்கள்,படம் வரைந்து கொண்டே சிறுவர்கள்,இப்படி பல முகங்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்றது!
இதன் மணம் தூரத்தில் வரும் போதே அடையாளம் காட்டும்!அதன் ஈரம் காயா மனல் பரப்பில் அவ்வப்போது வெண்நுரை பூப்பதும் வழக்கம் ! ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும் முடியலாம் ,இதை அடக்குவது அவ்வளவு சுலபமில்லை என்று சொல்லுவது வழக்கம் ! அதனால் தானோ என்னவோ ஆத்திரத்தை மட்டுமே அடக்க முடிந்தவர்கள் , அவர்கள் பயன்பாடு கருதி , அவர்களுக்கு அவசியமான இந்த இடத்திற்கு இந்த பெயர் சூட்டி கொண்டாடினர் !

' _ த்திர சந்து '

விஜயதசமி

பூஜை நாளில் ,பூக்கள்/ பழங்களின் விலை ஏறும் !வாரந்தோறும் துடைக்க வேண்டிய  வாகனங்களை ,வருடத்திற்கொருமுறையேனும் துடைக்க ஞாபகப் படுத்தும் தினம்! புத்தகங்களுக்கு ,நாம் கொடுக்கும் ஓய்வு போக, கட்டாய ஓய்வு கலைமகள் தரும் நாள் ! உறவுகளையும்,நட்புகளையும் புதுப்பித்துக் கொள்ள, பொம்மைகள் அடுக்கிக் காட்டி,பொங்கல்/சுன்டல் விநியோகித்து மகிழும் பண்டிகை! பாத்ரூம் பாடகர்கள் பகிரங்கமாகப் பாடி ,அரங்கேற்ற ஒத்திகைப் பார்க்க வாய்ப்புதரும் அருமையான சீசன் !
இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்தப் பண்டிகையை இனிப்புடன் இனிதே கொண்டாடி மகிழ , வாழ்த்துக்கள்!

ஒரு குடும்பத் தலைவிக்கு உயிர் ஒன்று ஆனால் மரணம் இரண்டு! கணவனுக்கு மனைவியாகவும்,பிள்ளைக்குத் தாயாகவும்,இழப்புகள் இரண்டு!
கணவன்:
ஆராரோ,பாடியதாரோ!மீழாத் துயில் கொண்டதாரோ!யாரோ,யாரோ,எனக்கினி யாரோ?என்னில் பாதியே,இது பொய்த்தூக்கமாய் இருக்கக்கூடாதா? நான் தூங்கவே இனி நாட்களாகுமா?
நான் முந்திப் போகவே யோகம் இல்லையே! நீ முந்திப் போனது நியாயமே இல்லையே!
தேவியே நான் செய்தக் குற்றம் என்னக் கூறு?என்னை ஒரு முறையேனும் கண் திறந்துப் பாரு!

பிள்ளை:
பொழுதாகிப் போனதே,இன்னும் தூக்கமா?சொல்லாமல் சென்ற தாயே,இது  நியாயமா?
எனக்கு உயிர் தந்த தேவியே!உனக்கு உயிர்தர என்னால்  முடியவில்லையே!பாலூட்டிப் பார்த்த தெய்வமே! பாலூத்திப் பார்க்க வைத்தாயே,தாயே!அன்னம் போட்ட என் அன்புக்கு, அரிசிபோட வைத்தானே அவன்.... எதற்கு ? எதனாலும்
ஈடு செய்ய முடியாத இந்த இழப்போ, கல்மனங்களைக் கண்ணீரில் கரைத்துப் பிழியும் வலியோ?

எரிமேடையில் கிடத்தப் பட்டிருந்த வாழ்க்கைத் துணையின் உடலைக் கடைசியாக உற்றுப் பார்த்தான் சிவராமன்.இந்த நிரந்தர சோகம்,அவன் நினைத்துப் பார்க்காத நிகழ்வு.ஏதோ ஒரு வலி தன்னுள் ஊர்வதை உணர்ந்தான் அவன்.அவள் உயிரோடு இருந்த போது, அவன் நினைவில் தங்கியதெல்லாம் அவளது குறைகள் மட்டுமே! ஒவ்வொருவரும் மற்றவர் பாசமுகத்தைப் பார்க்க ,அவர்கள் இறக்கும் வரைக் காத்திருக்திறார்கள்! இறந்தவர்களுக்கு,வஞ்சனையின்றி,சாதகம் புரிவது,அவர்கள் மரணம் ஒன்றே! அது தான் அவர்களின் இனிமையான நினைவுகளை மட்டுமே அழைத்து வருகிறது!
பொறுப்பில்லாது சுத்திக் கொண்டிருந்த தன் வாழ்வில்,அவள் வந்த பிறகு ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டதாக,தோன்றியது.தன்னை,தன் குறைகளோடு ஏற்றுக் கொண்டு,ஏற்ற தாழ்வுகளில் தோள் கொடுத்து, உடனிருந்து , கார்,பங்களா வாங்கி .....ச்சே.....இத்தனை உயர்வுகளுக்கு உடனிருந்த ஒரு ஜீவன்,இனி அவ்வளவு தானா? இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறதா? நேற்றுவரை அவள் ஓர் உயிர்!இன்று உடல்! நாளை வெறும் ஒரு சொல் மட்டுமா?ஐயகோ! அவள் நிறைகளுடன் வாழ,இனி ஒரு,வாய்ப்பு கிடைக்காதா?ஷிவ் மனதுக்குன் புலம்பினான் ! இந்த ஞானம் அவள் இறக்குமுன் வந்திருந்தால்...... வாழ்க்கை அர்த்தப் பட்டிருக்குமே என்று ,உடனே,சான்றோன் ஆனான்! நாளை அவளது சாம்பல் ,அவனுக்கு மட்டுமே அளிக்கப் படும் பாக்கியம்! வீடு திரும்பிய அவனுக்காகக் காத்திருந்தது,அவளது போட்டோ.....புதுப் புன்னகையுடன்! இன்று , அந்தப் புன்னகை,அவனுக்கு சரியாகவேப் பட்டது! ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவன் பெற்றான்! அவனுக்குத் துணை புரிந்தது.....வாழ்கைத் துணையின் உயிரற்ற அந்தப் புகைப்படம்!!!

புதைந்து போனப் புன்னகையை மீண்டும் கண்டெடுக்க முடிந்தால்.....பழைய  பூமி புதிதாகும் ! காவிக்கும் காதல் வரும்! அத்தை மகள் போல ,கொத்துமலர் பல பூக்கும் !பார்த்ததும் பனி உதிரும் ! பால் நிலவு பகலிலும் பொழியும்!வாழ்வினை சிந்தி சிந்தி,பின் வருந்தவே வாய்ப்பில்லை!மாண்டுபோகுமே மரணம் கூட !

உறவென்று நெருங்கி வாழ்தல் சரியா? துறவென்று ஒதுங்கி வாழ்தல் சரியா?
ஒரு அலசல் :

வீடு வெறுத்து காடு வந்து ,பறவைகளின் பாடல்கள் ,அருவிகளின் சங்கீதம்,முத்து நீரூற்று,மூலிகைக் காற்று,பூக்களின் வாசம்,தனிமையின் சிநேகம்,இவைகளோடு தனதிஷ்டம் போல வாழும் வாழ்க்கை இனியதா? உறவு தேடி வந்து உயிர் பிதுங்கும் அவஸ்த்தை வாழ்க்கை இனியதா?
லௌகீகம் சிக்கல் தான்;உலகம் ரணம் தான்; உறவு சுமை தான்.எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா?தழுவி வாழ்வதா?தள்ளி வாழும் வாழ்க்கையில் அமைதி இருக்கலாம்.அது மயான அமைதி.தழுவி வாழும் வாழ்க்கையில் சப்தம் இருக்கலாம் .அது உயிருள்ளது.வாழ்க்கை என்பது சோபனங்களின் சொப்பனங்காக எண்ணி , வாழ்க்கையோடு கோபித்துக் கொண்டு ,முதுகு திருப்பி ,வெறுமை காண்பது ஒரு வித அறியாமையே.நாள் என்பது இருளையும் சேர்த்துதான்;பூ என்பது முள்ளோ/காம்போ சேர்ந்ததுதான்;கடல் என்பது நுரைகளைக் கொண்டதுதான்; வாழ்க்கை என்பது ரணங்கள் சேர்ந்ததுதான்.
சிரிக்க வேண்டும்;அழவும் வேண்டும்.
துய்க்க வேண்டும்;துயரமும் வேண்டும்.
பாசம் வேண்டும்;பகைமையும் வேண்டும்.
எல்லாம் கலந்த கலவைதான் வாழ்க்கை.
தான் மண்ணுக்குள் புதைய சம்மதிக்காவிட்டால்,முளைக்க முடியுமா விதை ?
துயரங்களை ஏற்கப் பழகு;துன்பங்களில் சிரிக்கப் பழகு.
சோகங்களை எரிக்கப் பழகு; கண்ணீரை செரிக்கப் பழகு.
அக்கரைப் பச்சையாகத் தெரியும் அங்குப் போகும் வரை!

ஆக, வந்த வாழ்க்கையை நேசிக்கப் பழகு,வாழப் பழகு!

பயனுள்ள பாடம் :

-இழிந்தோரிடமும் பணிவு கொள்! 'சாக்கடையிலும் பணிவுடன் ஓடும்  நீரைப் போல '

- நாவே, நீ மௌனம் காப்பாய்!
' சத்தமிடும் சில்லரையை உள்ளடக்கியும்,வாயை  மூடியுள்ள சுருக்குப்பை போல '

- ஆயுளே இன்னும் நீள்வாய் !
' பொழுது சாய, நீளும் நிழலாக '

- உடலே ,உறுதி கொள் !
' தன்னிலும் வலியதைத் தாங்கும்,தண்டவாளமாய் '

- உணர்வே கலங்காதே !
' ஊரே அழும்போதும் கலங்கா வெட்டியானாக '

- அறிவே அடக்கம் கொள் !
' எல்லாம் கொண்டும் மௌனம் காக்கும் நூலகமாய் '

- மனமே பற்று அற்றிரு !
' சுற்றும் உலகை சூழ்ந்திருந்தாலும் ,ஒட்டாது உலவும் காற்றாக '

- என்றும் பிரகாச முகம் கொள் !
' என்றும் குறையா ஒளி கொள்ளும் சூரியனாய் '

விழியே,எதிலும் நல்லவை காண்!
' வேப்பம்பூவிலும் தேனைக் காணும் வண்டாக '

பொது நலமே லட்சியம் கொள் !
' ஊருக்கு நிழல் கொடுக்க,தன் தலையில் வெயில் ஏற்கும் விருட்சமாக '

முக்திக்கு வழி.....?

எல்லோரும் விழித்திருக்க , எவருக்கும் தெரியாமல்,திருட்டுத்தனமாக, *மலரை*முத்தமிட்டு,திக்குமுக்காடியதாம் *காற்று*!முக்தியின் மேல் மோகம் கொண்ட அந்த சோலைமலர், காற்றைக் கேட்டதாம் ,' முக்தியடைவது எப்படி?' ஆனால் காற்றோ மௌனம் பேசியது!
மலருக்கும் உண்டல்லவா,மலரும் நினைவுகள்! அன்று வாயுமண்டலம் வசீகரித்து மொட்டவிழ்த்த முதல் மூச்சு........அப்பப்பா என்ன சுகம் என்றே நினைத்து மகிழ்ந்தது!தனக்குக் தெரியாமலே தனக்குள் இருக்கும் தேனை,தனக்கே தானம் செய்த *வண்டிடமும்*முக்தி பற்றி பதிலில்லை! இந்நிலையில் ஒரு நாள் ,தன் புலிநகம் கொண்டு *பூக்காரி* அந்தப் பூவைக் கொய்தினாள்!வாசமே சுவாசம் ஆனதால் ,வாடும்வரை இறப்பில்லை!செடியில் தொடங்கியப் பயணம் பூக்காரி கூடைக்குத் தாவியது!ஒற்றை நாரில் தன்னை சுருக்குப் போட்டும் ,ஜீவன் கொண்டது அந்த சோலைமலர்! பூக்காரி மந்திரம் போடாமலே ,பூவை காசாக்கினாள்!மலர் விற்ற காசில் மண்ணெண்ணெய் வாங்கியே வீடு திரும்பினாள்!அவளிடமும் முக்தி பற்றி பதிலின்றி வாட தொடங்கியது அந்த அப்பாவி மலர்!இப்போது ,பூ,இருளை நெசவு செய்யும் இளம் மனைவி கூந்தலுக்கு பதவி உயர்ந்தது!தள்ளிப் படுத்தவனை ,வாசம் கொண்டு வாங்கி நசுங்கியது பூ!காலை வெயிலில் வாடியப் பூவை வாசலில் எரிந்தாள் வேலைக்காரி!புல்லைத்தேடி ஏமாந்தலைந்த நகரத்து கன்று ஒன்று,பூவை நன்றாக ருசித்தே மென்றுத் தின்றது!பூவின் யாத்திரை முடிவில் ,இறுதி வரை உடன் பயணித்தக் காற்று....மேலும் தாமதியாமல் ..... முக்திக்கு விளக்கமளித்தது! ' முக்தி என்று தனியாக ஒன்றுமில்லை........முட்டாள் பூவே.....காற்றில் கலந்த சுகந்தம்....வண்டுக்கு வழங்கிய தேன்....... பூக்காரியின் வாழ்வாதாரம்..... உறவுகளின் ஊடல்.......கன்றுக்குத் தீர்ந்த பசி.........இவையாவும் நீ பெற்ற முக்தியே !
சொர்க்கம் என்று ஒன்று ,தனியே கிடையாது!
' *மகிழச்செய்து மகிழ்வதே முக்தி*' என்று முடித்தது .....அந்த.....ஞானக் காற்று !