ஞாயிறு, 31 மே, 2015

ஜூன்1 - நேத்ரா பிறந்த நாள் !

 #
 நேத்ரா பிறந்த நாள் வாழ்த்து!

நீத்தூ  என்கிற நேத்ரா எங்கள் செல்லமான பேத்தி! அழகான ஆடல் கலைஞர்! அவர் வயலின் கருவி பொழியும் இசை அருவி! குமான் எனும் கணிதக் கலை பயின்று கணிதத்தில் என்றும்  முன்னனி மாணவி! உருளைக்கிழங்கில் மின் உற்பத்தி உபகரணம் செய்தே விஞ்ஞான பொருட்காட்சியில் பாராட்டு பெற்றவர்! நீச்சல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நீச்சல் வீராங்கனை! எத்திக்கும் பெருமை கொள்ளும் ரித்திக்கின் அன்பு அக்கா! பெற்றோரின் பேரன்பு வாரிசு! ஐந்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் ஓர் ஆறாவது அறிவு! நேத்ரா என்பது கண்ணைச் சார்ந்தது! கண்மணியே ……நீ பல்லாண்டு வாழ்க! வளமும் நலமும் யாவும் பெற்றே……பெற்றோர், தம்பியுடனும் மற்றோருடனும் நூறாண்டுகள் மேலும்  மகிழ்வுடன் வாழ்க! வாழ்க என வாழ்த்துகிறோம்! 😃😃😃!!!!

- " ஐந்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் ஓர் ஏழாம் அறிவு " - என்று திருத்தி வாசிக்கவும்!ஐந்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் ஓர் ஏழாம் அறிவு " - என்று திருத்தி வாசிக்கவும்!  #

சனி, 30 மே, 2015

இன்றைய சினிமா!

#
இந்த சினிமாமயில்கள் தோகை விரித்து நிழல் கொடுக்கும் என்று நினைத்தோம்!ஆனால் அவை நம் ஓய்வு நேரங்களின் மேல் எச்சமிட்டு விட்டன! நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே, மீசை முளைக்க வைத்து விட்டது! பணக்கார வீட்டுப் பெண்ணைப் போல, நாளுக்கொரு புடவைக் கட்டும், நகரத்துச் சுவர்கள்! அந்த சுவரொட்டிகளில், கசாப்புக் கடையில் தொங்கும் உரிக்கப்பட்ட ஆடுகளாய்…உல்லாச நடிகைகள்! நாம் விரலில் மோதிரம் அணிவதுபோல் அவர்கள் உடலில் ஆடையும்  அணிந்திருப்பார்கள்!
பெரிசுக் கழுதைகள் ஒரு தீர்மானம் போட்டன.இனி வயதுக்கு வராத கழுதைகளினி 'ஏ' சுவரொட்டி மேயலாகாது! ஐயகோ பாவம்! அச்சிறு கழுதைகள் வாரமும் பட்டினிக் கிடந்தன!
இன்றுப் படத்திற்குப் பாட்டெழுத, கம்பனே வந்தாலும் கதை வேறு! ' குமரன் கடைந்தான் பாற்கடலை! அதைப் பார்த்த இவன் தின்றான் வேர்கடலை!'……இப்படிப் பல்லவி எழுதினால் வாய்ப்பு தேடி வரும்!
எதார்த்தம் என்ற பேரால் அக்குளில் அடிக்கடி அழுக்கு காட்டும் கொடுமை காணீர்! பிரபஞ்சத்தையே தரிசிக்க சௌகரியமான சாளரம் இந்த சினிமா! அதில் நாம் பார்ப்பதென்னவோ…நாய்ச் சண்டைதான்! உயிரைக் கசிய விட்டுக் கொண்டிருக்கும் தேகபலமற்ற தேசத்திற்கு…சினிமா ஒரு மயக்க மருந்தா? அது நம் மூர்ச்சை தெளிவிக்கும் மூலிகையன்றோ!
இளைய சமுதாயம் இதை சலவை செய்யுமா?காலம் பதில் சொல்லட்டும்!!
- நன்றி க.கா.க

அருண் பிறந்ததின(30மே)வாழ்த்து!

: அக்செங்ச்சர் மட்டுமல்ல……அனைவருமே பெருமை கொள்ளும் திருநாள்! தலைமை ஆசிரியரின் தங்க மகன்! அன்னையின் அன்புப் பிள்ளை! அம்பத்தூரில் உதித்து அங்கேயே வளர்ந்த அருமை ஆண்குழந்தை!

சாஸ்தாவே வியந்த அசாதாரணப் படிப்பாற்றல்! விளையாட்டில் விருப்பம் கொள்ளையாகக் கொண்ட ஓர் உன்னத உறவு! இன்று பிறந்த தினம் காணும் இனிய இளைஞன்! அண்டை மாநிலமெனினும் அயரா உழைப்பாளி! அன்பின் அடையாளம் அருணே…வாழ்க! வாழ்கவென மனமார வாழ்த்துகிறோம்! பல்லாண்டு வாழ்க! பதவிகள் பல பெருக! பெற்றோரும் மற்றோரும் மேலும் பாராட்ட சாதனை பல புரிக! நேரிலும் வாழ்த்துகிறோம்! நாளை விவாபவன் வருக!
WISH YOU A VERY HAPPY BIRTHDAY !😃😃😃😃!!!

: Accenture அறியாத விடுமுறைக் காரணம் ! இந்தக் குடும்பம் அறியுமே அந்தக் காரணம்! கொண்டாடுவோம் குதூகலத்துடன் இந்நாளை! வாழ்க! #

வெள்ளி, 29 மே, 2015

ஆணவம் அழியனும் !

புயலாய், புழுவாய், பூமியில் இருப்பினும், கல்லாதவரும் கனிவுடன் வாழ்ந்தால் , நல்லோர் மதிக்க நயம்பட வாழ்வர்! நாணல் போலவே நாணிப்பணிந்து, தேவைப் பட்டால் தென்னை போலிருந்து, மக்கள் மத்தியில் மயில் போலாடி, குழந்தைகளிடையே குயில் போல் பாடி, கோட்டானாகிக் குரங்காகாமல், வாழும் மனிதரை வையகம் போற்றும்! எந்த நேரமும் எகிரிக் குதிப்போர், சொந்த அறிவு துணைக்கு வராது, மத்த அறிவால் மந்தைகளாவர்!

வாழ்ந்து தாழ்ந்த வரலாறு பார்த்தால், தாழ்ந்து வாழ்ந்த சரித்திரம் படித்தால், ஏறும்போதே இறங்கிய சில பேர்,  ஏறாமலேயே இறந்தவர் சில பேர், ஏறிய இடத்தை இறுகியேப் பிடித்துஇறங்காமலே இருந்தவர் சில பேர், எத்தனைக் குதிரைகள்! எத்தனை வண்டிகள்! எத்தனை யானைகள்! எத்தனை பூனைகள்! இத்தனைப் பார்த்தும், இனியும் பார்த்தும் ……மமதை ஏனோ மறைந்த பாடில்லை! ஆணவம் என்பதும் அழியவே இல்லை! ஆணவம் ஒன்றே அவமெனக் காணும்போதே ……கனிவுறும் வாழ்க்கை! கற்கண்டாய் இனிக்கும் நாட்கள்! !!!!

புதன், 27 மே, 2015

மறக்கமுடியா மழைக்காலம் !

#
மறக்கமுடியா……மழைக் காலம்!
( கவிதையும் காதலும் இரட்டைப் பிறவிகள்)

அது ஒரு காலம் கண்ணே……கார்காலம்!
நனைந்தபடி நடந்து கொண்டே சென்றோம்! எதிரில் ஒரு மரம் கண்டோம் ! அது அப்போது மும்முரமாக  தண்ணீர் விழுதுகளைத் தரைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது! இருந்தும் அந்த ஒழுகும் குடையின் கீழ் ஒதுங்கினோம்!அந்த மரம் …நம் வரவிற்குக் காத்திருந்தது போல …உதிரிப் பூக்களைத் தூவி நம்மை வரவேற்றது!இலைகளும் …தன் பங்கிற்கு……சேமித்து வைத்திருந்தத் தண்ணீர்க் காசுகளை…நமக்காக செலவழித்தன! நீர்த்திவலைகள் …ஒத்தையடிப்பாதையாக…உன் நேர்வகிட்டில்…ஓடிக் கொண்டிருந்தன! உன் சம்மதமின்றி நான் ரசித்து அந்தக் காட்சி! அந்தி மழைக்கு நன்றி!
நம் இருவர்கிடையே இருந்த இடைவெளியில் …நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது!

எவ்வளவோ பேச எண்ணி(னோம்) னேன்!ஆனால் வார்த்தைகள் போகும் பாதையெங்கும்…மௌனம் எனும் பசை தடவியிருந்தது!
உன் முகத்தில் பனித்துளியாக ஆவல் கொண்ட நீர்த்துளிகள்…உன் நெற்றியில் பட்டுத் தெறித்ததையும் ரசித்தேன்!உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு என் கைக்குட்டையை நீட்டினேன்!அதில் உன் நெற்றியை ஒற்றி…திருப்பிக் கொடுத்தாய்!ஏதோ ஒரு துணிச்சலோடு நான் கேட்டேன்! " இந்தக் கைக்குட்டைஉலராமல் இருக்க …நான் என்ன செய்ய வேண்டும்?"
நீ சிரித்தபடி சொன்னாய்" ஒன்றும் செய்யக் கூடாது" என்றபோது……வெளியில் நின்ற மழை என் மனதின் உள்ளே பெய்தது!

அது ஒரு மறக்கமுடியாத மழைக் காலம்!
அது ஒரு காலம் கண்ணே……கார்காலம்!!  #

செவ்வாய், 26 மே, 2015

வாழ்வியல் நியதி !

#
கவலைப்படு மனிதா…………நீ கவலை கொள்ளவே பிறந்தாய்! கவலை கொள்!
மழையில் நனையும் கடலைக் கண்டு கவலை கொள்ளாது போனால் எப்படி? கவலை கொள்! சமுத்திரம் சங்குக்குள் குதித்து மறைவதாகக் கவலைவருதா? கவலை கொள்!கவலையே இல்லையென்றாலும் அதே ஒரு கவலையாகக் கவலை கொள்! தவறொன்றும் இல்லை!

பிறவி என்பது பெருங்கடல் கிடையாது! எண்ணிப் பார்த்தால் அது ஒரு சிறிய வாய்க்கால்!கரை தொடும் முன்னே கரைந்தவர் பலர்!கரையைத்தொட்டுக் கடந்தவர் சிலர்!மனிதக் கணக்கில் வாழ்வுபெரிது! காலக்கணக்கில் வாழ்நாள் சிறிது!
ஆதலால் மனிதா……! இருக்கும் நாட்களை இரட்டிப்பாக்கு!
சூரியன் ,நிலவு இரண்டிலும் விழித்திரு! படுக்கைப் போட்டுத் துயில் கொள்ளாதே! துயில் வரும் போது படுக்கைப் போடு! காலையில் பூமியை உள் துளையிட்டு……மாலையில் பூமியின் மறுபுறம் வெளிப்படு!மனித உள்ளம் ஒரு காலிக் கோப்பை, அதை லட்சியங்களால் மட்டும்  நிரப்பு!விண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு! செவ்வாய்க் கிரகம் சீக்கிரம் உனக்கு! வாழியவே! #

சனி, 23 மே, 2015

வாழ்ந்து காட்டுகிறேன்!

வாழப்பிறந்தேன்!

புல்லில் நடந்துப் பூப்பறிப்பதல்ல……வாழ்க்கை! முள்ளைக் கடந்து கனிபறிப்பது!

வாழப்பிறந்ததால் வாழ்ந்து காட்டுகிறேன்!வாழ்க்கை என்னை கேலி செய்தாலும் வாழ்ந்து காட்டுவேன்!
மழையோ,வெயிலோ,தென்றலோ,புயலோ,இரவோ,பகலோ,உறவோ,பகையோ…வாழ்ந்து காட்டுகிறேன்!
வாழ்க்கைஒரு சோலைவனமானால் …மலர்ந்துக் காட்டுகிறேன்! வாழ்க்கை ஒரு பாலைவனமா …கடந்து காட்டுகிறேன்!
வாழ்க்கைஎன்பது கண்ணீரானால் …துடைத்துக் காட்டுகிறேன்! வாழ்க்கை என்பது பந்தயமானால் …ஜெயித்துக் காட்டுகிறேன்!
கறையும் கொண்டது நிலவு! முள்ளும் உடையது ரோஜா! இருளும் கொண்டது நாள்! துயரும் சேர்ந்ததே வாழ்க்கை! துன்பத்தை எல்லாம் எருவாக்கி…இன்பத்தை வாழ்வில் உருவாக்கி……வாழ்ந்து காட்டுகிறேன்!
கண்ணீருக்கு……இனி கைகுட்டை……தேடாமல்……காரணம் தேடியே………வென்றிடுவேன்!!!

வெள்ளி, 22 மே, 2015

முட்டாள்த்தனமான முடிவு!

தேர்வில் தோல்வியுற்ற ஒரு கிராமத்துப் பையன் தன்னை முட்டாள்தனமாக முடித்துக் கொண்டதற்கு…தாயின் மொழியிலேயே ஒரு கனக்கும் கவி கேளீர்:

வீட்டுக்கு ஒத்தமகன், வெயில் படாம வளத்தமகன், எழுத்தாணி புடிச்சமகன்,ஏச்சுப்புட்டு போனானே!
மீச மொளைக்கல்லியே …மேல்படிப்புப் போகல்லியே…ஆசை பழுக்கல்லியே…அரைவழியில போனானே!
பூட்டாத குச்சுவீட்டில்…புயல் காத்து புகுந்திருச்சே…சந்ததிக்கு ஏத்திவச்ச…சரவெளக்கு அணைஞ்சிருச்சே! வக்கணையா உக்காந்து,மார்க்கெழுதும் வாத்தியாரு…சிக்கணமா இல்லாட்டிச் செத்திருக்கமாட்டானே!
பெயிலாகிப் போனது, பீடைவிட்டுப் போனதுன்னு, தேத்தியிருப்பேனே…தெரியாமப் போனானே! என்னைக்குப் பரிட்சை எழவு முடிஞ்சிச்சோ…அன்னைக்கே எம்புள்ள ஆள்பாதி ஆனானே! வேயாதக் கூரைய வெரிச்சுப் பாத்தானே, ஊத்திவச்சக் கஞ்சிய உத்து உத்துப் பாத்தானே! ஒரு நம்பர் தவறிருச்சு,உள்நாக்கு விழுந்திருச்சு!  ஈயெறும்பு அண்டாம,எளங்காத்துத் தாக்காம,நோன்பிருந்து பெத்தமகன், நுரைதள்ளிமுடிஞ்சானே!
எம்புள்ள……எங்கண்ணீர்……என்னோடப் போகட்டும்!ஒத்தமகன் பலி குடுத்தேன்!ஊர்மக்களே யோசிங்க!

பாவிமக்கா! பாவிமக்கா! பள்ளிக்கூடப் புள்ளகளா, ஈ பறந்தக் காத்துக்கே, இடிஞ்சு போனா எப்படி?சித்தெறும்புக் கடிக்கெல்லாம் செத்துகித்துப் போகாதீக!தவம்கெடந்து பெத்தவுகளுக்கு தண்டனையா? தாங்குவாகளா?அம்மம்மா! -  -----

வியாழன், 21 மே, 2015

வியத்தல்……வாழ்க்கையின் மூச்சு!


பிரபஞ்சத்தைப் போன்று வாழ்க்கையும் எல்லையற்றது!
புறப்பார்வைக்கு சிக்காதவை!எல்லையற்ற ஒன்றை எல்லையற்ற ஒன்றால்தான் அளக்க முடியும்!நம்முள் உள்ள ஒன்று எல்லையற்றது ……… எது? அது மனமில்லாமல் வேறு ஏது! எல்லையற்ற பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும் அளந்து பார்க்க மனம் துடித்த போது …பிறந்தது…கலை!மாறாத நிஜங்களான பிறப்பு, இறப்பிற்கிடையில்  வந்து போகும் நிஜங்களைக் கண்டறியும் முயற்சியே…கலை! அந்தக் கலைகளில் வலிமையானதும் மொழிக்கு உயிரூட்டுவதும்…கவிதையே!காலம் துளித்துளியாய் சொட்டிக் கொண்டெயிருக்கிறது……தாவரங்கள்…உயிர்கள்…மனிதர்கள்…கிரகங்கள் …என்று பிரக்ஞையற்று!காலத்தின் சிதறும் துளிகளைச் சேமிக்க…மனிதன் கண்டறிந்த கலன்…கவிதை! காலம் மரணத்தை நியாயப் படுத்தும்போது…கவிதை …வாழ்க்கையை நியாயப் படுத்தி வாழச்சொல்கிறது!காலம் பரப்பும் இருளை தீக்குச்சியால் கிழித்தெரிகிறது கவிதை!விஞ்ஞானம் கலையிரண்டுக்கும் அடிப்படை…வியத்தலே!இந்த உலகத்தை வியக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசான்…கவிதை!
விஞ்ஞானம் விளக்கு வைத்துத் தேடுவதை…கண்கள் மூடிக் கண்டறிகிறது…கவிதை!வாழப்படும்போது வலியாய் உள்ள வாழ்க்கைக் கட்டங்கள் ……வாழ்ந்து முடித்து அசைப் போட்டுப் பார்க்கும்போது…அதுவே வரமாகத் தோன்றும்! தன் அனுபவம் தனது ருசியைத் தாண்டி உலக அளவில் முழுமை நோக்கி அழைத்துச் செல்வன…கவிதைகள்!
கவிதையுடன் கைகோற்கத் தயாரா? வாருங்கள் …மழையில் நனையலாம்! வானவில் ரசிக்கலாம்!மலர்களில் மனம் கரையலாம்! வாழ்வின் வலி தாங்கலாம்! புயலையும் பூகம்பத்தையும் எதிர்கொள்ளலாம்! படைப்பவனைவிட …படைப்பு வலியது! கடவுளைவிட …நம்பிக்கை வலியது!
உண்மைகள் உறங்கும் வேளை…ஊழல்கள் ஊர்வலம் போகும்!
கவிதை ரசிப்போம்! வாழ்வை வியப்போம்!   வாழ்க!

புதன், 20 மே, 2015

சேவை இலக்கணம்!

சேவகன்!
உறுதி,நேர்மை,உண்மை,உழைப்பு,வீரம்,விவேகம் இத்தனையும் இணைந்து சேவையே சுவாசமாக வாழ்பவன்! இவனே … ……சேவகன்!
கடமைத் தலைவன்,இளமைக்கலைஞன்……இவனே சேவகன்!
லத்தியைப் பிடித்து இவன் நகர்வலம் வருகையில் …காற்றும் கைகள் கட்டும்! வாகை சூட …வானம் முரசு கொட்டும்!
கிழக்கு வெளுக்கும் வரை, விளக்கு உறங்கும் வரை,விழித்திருக்கும் நம் தோழன்!
சீதைகளை மீட்பதிலே, கோதையரைக் காப்பதிலே, கொண்டு கரை சேர்ப்பதிலே…இவன்  சேவகன்!
ஊழல்கள் ஊர்வலத்தில்,உண்மைகள் தொலையும் நேரம், நம்பிவரும் ஏழையர்க்கு …இவன் சேவகன்!
இதயம் துடித்தபடி,இமைகள்அடித்தபடி,போர்புரியும் வேளையில் இவன் சிங்கம் பார்வையிலே!சிறுத்தை இவன் பாய்வதிலே!இருட்டைத் துவைத்து , திருட்டை ஒழிப்பவன்! ஜெகத்தில் சிறந்தவன், ஜெயிக்கப் பிறந்தவன்!

புத்தியில் கண்ணன்! சக்தியில் அர்ச்சுனன்! லத்தியில் பீமன்!
தீயை வளைத்து,அதில் திரியை நுழைத்து, தீபம் ஏற்றிவிடத் திட்டம் தீட்டும் நாயகன்!
இவனே உண்மையில் சேவகன்!

திங்கள், 18 மே, 2015

ஒரு பூ பூப்பெய்தியது!



முதல்தாரத்தின் மகளுடன் வாழ்ந்து வரும் இளையதாரம்!

அன்னம்மா பெத்தவளே! ஆடுமேய்க்கப் போனவளே!அந்தி மங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன!அடியே என் சக்களத்தி! அழாமத்தான் சொல்லேண்டி!
என்ன………சொன்னே………? வாய்க்காக் கரையோரம் வயித்துவலி வந்துடுச்சா! பயந்து நடுங்கையில பாவாடை நனஞ்சுச்சா?
பிஞ்சுப் பழுத்ததென்ன,பேரிழவு வந்ததென்ன! முக்காப் பவுனுக்கே, முன்னூறு குறையுதடி!இந்த லட்சணத்தில் ஏண்டியம்மா குத்தவச்ச! பாவடை சட்டையே அந்த பரமசிவன் கொடுத்த வரம்! சக்களத்தி மவளே நான் தாவணிக்கு என்ன பண்ண! தாவணி வேணுமின்னா, தாய்மாமன் வரவேணும்! தாய்மாமன் வரணுமின்னா, ஜாமீனில் வெளி வரவேணும்!அப்பன் வெறுங்கூடு! ஆத்தாளோக் கருவாடு! இந்த லட்சணத்தில் ஏண்டியம்மா குத்தவச்ச! பதினாறோ பதினேழோ, பாதகத்திக் குத்தவச்சா, பதறாம இருந்திருப்பேன்! பந்தக்கால் போட்டிருப்பேன்!
பதினாலு வயசுக்கே , பத்துமாசம் இருக்கையில, பாவிமக…………குந்திப் புட்டா! ஆளாகி நின்னவள ஆடுமேய்க்கச் சொன்னாக்கா……அப்பன் தடுப்பாக, அடுத்தவுக முறைப்பாக! இந்த ராத்திரிக்கு ராத்திரியே, ரகசியமாத் தலைமுழுகி, நாளைக்கே ஆடோட்டு! யாருக்குந் தெரியாது! ஆடுமேய்க்கப் போகயில அங்கங்கே நிக்காதே!
அடியே ஒஞ்சங்கதிய……ஆட்டுக்குஞ்சொல்லாதே! ஆமா!
- நன்றி. க.கா.க

ஞாயிறு, 17 மே, 2015

விறகுவெட்டி!

கதிரவனுக்குக் கீழ்உள்ள அத்தனையும் கவிதைக்குக்கு  ஒரு கருதானே!

 இதோ………கிராமத்து வாழ்…ஓர் இளம் விதவை………… ………கிராமத்துல……மாசற்ற காத்தெல்லாம் ……கேக்கத்தான் நல்லாருக்கு!

முருக மலைமேல, முள்விறகு நானெடுக்க, பொழப்பு நடக்கணுமே,புறப்பட்டேன் கால்கடுக்க!
எட்டுமேல் எட்டுவச்சு, எட்டுமைல் நடந்தாக்கா……உச்சிப் பொழுது வரும்!உள்நாக்கில் தாகம் வரும்!
செத்த எலி மிதந்தாலும், செல்லாத்தா சுனைத்தண்ணி……உள்நாக்க நனைக்கயில, உசிருக்கே உசுருவரும்!
இண்டம் புதர் இழுக்கும், இலந்த மரம் கைக்கிழிக்கும்,பொத்தக் கள்ளிமுள்ளு,பொடவையில நூலெடுக்கும்!

பொசுக்கென்றே மழை வருமா! போகயில புயல் வருமா? காஞ்ச மரம் காணயில, காட்டு ரேஞ்சர் கண்படுமா?

எங்கிருந்தோ பயம் வரும், எச்சியோ உலர்ந்து விடும், மாதவிலக்கானாலும், பாதியில நின்னு விடும்!
வெறகு வெட்டும் அரிவாளோ……விறக விட்டு வெரல வெட்டும்! கத்தாழ நார்வந்து விறகு கட்ட கயிறு கொடுக்கும்! கட்டிவச்ச விறகு தூக்க, நான் எங்க ஆள் பாக்க! இடுப்புப் புடிப்போட, கழுத்து வலியோட , மந்தை வந்து நான் சேர……மாலை மங்கிவிடும்! மந்தையில விறகு வித்தா,மங்கையத்தான் பாக்குராக! பச்சை விறகுன்னு சொல்லி, பாதி விலை கேக்குராக!
கேட்ட வெலைக்கு வித்து, கேழ்வரக வாங்கிபுட்டு……குடிசைக்கு நான் போனா……அங்க  குடிக்கக்கூடத் தண்ணி இல்ல!
என் வீட்டு அடுப்பெரிக்க…………எனக்கே விறகுமில்ல…………இதை………எங்க போய்……… என்னன்னு………நான்……சொல்ல!😢 !

வெள்ளி, 15 மே, 2015

பிறந்த தின வாழ்த்து!

15 மேதினம் 2015 :

குழந்தைகள் உரிமையில் குதூகலம் காணும் ஒரு பிறவி! சராசரி , குடும்ப சேவையில் விடுபட்டு வித்தியாசம் காணும் வித்யா என்கிற வித்தியாசப் பெண்மணி! சமையலறை அறியாத சமூக சேவகி!அரசு அங்கீகாரம் பெற்ற  சங்கரின் துணைவி,சாதனை  ப் பெண்மணி! வர்ஷாவின் அம்மா வருஷமும் பொதுசேவை! விஷாலின் அன்னை, விஷயங்கள் பல அறிந்த சேவகி!வித்யாலயா என்றாலே படிப்புக்கு உறவுதானே! வாட்ஸப்பில் செய்தி வாரிவழங்குவதும் அன்றாடப் பணியாகவே! மற்றவர் பகிறும் செய்திகளுக்கும் உடனே பதிலோடு பாராட்டவும் செய்யும் பரந்த உள்ளம்!
பிறந்தநாள் காணும் குடும்பப் பிறவியே! வாழ்க பல்லாண்டு! வளர்க தொண்டுகள்! விரைவில் மகளுக்கு மணம்புரிந்து மாமியாராகவும் வாழ்த்துகிறோம்! வாழ்க!

- கா.ம.க

அறுபத்தைந்தாம் கலை!

கல்வியில் பலவகை!
' நீ மாடு மேய்க்கத்தான்  லாயக்கு ' …………என்று சொன்னால் இழிவா? எவன் சொன்னான் அப்படி?

ஓணான்களின் ஜென்பபூமியான கள்ளிக் காடுகளில்……கற்றாழைக் கதகதப்பில், பாம்புறங்கும் காடுகளில், இலந்தையும் நெருஞ்சியும் இந்திய ஜனத்தொகையாக ப் பெருகியிருக்கும் வனாந்தரத்தில், கால்சட்டைக் கிழிக்கும் காற்றின் வெடவெடப்பில்………மாடுமேய்த்தல்……ஒரு கல்வி/தவம்/ஞானம்! மாடுகள் நுனிப்புல் மேயும் நேரம்……தமிழின் வேர்வரை அங்கு நாமும் மேயலாம்!
கள்ளிமரத்து நிழலில் , கம்பங்கூழுக்குக் காய்ந்த மிளகாய்க் கடித்து உண்ணும் போது ஒரு உண்மை விளங்கும்! ' ருசி என்பது உணவில் இல்லை, பசியில்தான் உள்ளது ' என்பது தெள்ளத் தெளிவாகும்!
 மாடுமேய்த்தல்…ஒரு கல்வி/தவம்/ஞானம்!

அந்த வெயில் உன் ஊனினை உருக்கும்! அந்தத் தனிமை உன் உள்ளொளி பெருக்கும்!பார்வைக்குக் கூர்மை தரும்! மனதுக்கு ஓர்மை தரும்!
ஞானிகனே……ஆய கலைகள் அறுபத்தி நான்கென்றால்……இது………அறுபத்தி ஐந்தாவது ……………புரிகிறதா? மாடுமேய்த்தல்……………
…ஒரு கல்வி/தவம்/ஞானம்!

நன்றி! 

வியாழன், 14 மே, 2015

நிகழ்காலமே நிஜம்!

வாழ்க்கை…………யதார்த்தங்கள்……………பார்ப்போமா……:

சாமங்கள் முடிந்த பின்னால் சந்திரன் எஞ்சி நிற்கும்! ஈமங்கள் முடிந்து போகும்வரை, ஈரங்கள் காத்து நிற்கும்!
நாமங்கள் முடிந்த பின்னே ஞானங்கள் பாராட்டு பெறும்!
உலோபியின் புதையலாய் ……வாகனம் நிறுத்த இடம் கிடைத்து களிக்கும் உள்ளம்! அண்ணாந்துப் பார்த்து ஆச்சரியப் படும் உலோகப் பறவை! விலங்கினத்திலிருந்து வித்தியாசம் காட்டும் கால்களின் எண்ணிக்கை! வாழ்க்கையை வயிற்றுக்கு விற்கத் துடிக்கும் சதவிகித சமூகம்!
நடைபயில விழையும் மரங்களைக் கண்டதுண்டா?
குடையை மழைக்கெதிராய் ப் பிடிக்கும் கறுப்புக்  கொடியாகப் பார்த்ததுண்டா?விண்ணிலிருந்து அளவிலா முத்துக்கள் திரவமாகத் தெறிப்பதை ரசித்ததுண்டா?
அந்தியின் அழகு வண்ணங்களை ஆராதித்ததுண்டா? யந்திர வாழ்க்கை  மீறி……எட்டி நின்று வாழ்வை அலசியதுண்டா? வாழ்வின் நோக்கம் என்ன என்றே சிந்தித்ததுண்டா? எவ்வளவு துய்க்கிறோம் என்பது சரியா? எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பது சரியா? நீசெலவழிக்காத வரை உன் வங்கிக் கணக்கு உனதல்ல!  யோசிக்க………யோசிக்க………உண்மை விளங்கும்! மனம் சலவை தேவை! வாழ்க்கை வெளுக்கும் ! வானம் வசப்படும்! வாழ்க!
- கா.ம.க

ஞாயிறு, 10 மே, 2015

அன்னையர் தின அர்ப்பணிப்பு!

என் அன்னை சரசுவதி அவர்கள் நினைவுநாள் ( மே 8 ) மற்றும் அன்னையர் தினம் ( மே 10 )முன்னிட்டு........:

அன்னையின் நினைவு நாள்! ஆன்மா சாந்தி கொண்டு அருள்புரிய வேண்டி...... நினைவு கொள்ளும் பிள்ளைகளும், பிள்ளைகளின் வாழ்க்கைத் துணைகளும், பேரக்குழந்தைகளும், கொள்ளுபேரக் குழந்தைகளும்!உள் நாட்டிலும், வெளிநாட்டிலும்!இப்போதும், எப்போதும்!எங்களை கரை சேர்த்த ப் புண்ணியவதி! ஏழு வயிறு பசி பார்க்காமல் ....தன் வயிறை மறந்த தன்னலமற்ற தியாக உள்ளம்! நாங்கள் உண்ணும் போது இன்னும் தேவை என எழுப்பும் எங்கள் மனக்குரல் கேட்பாள்!  மந்திரம மாயமாய் மறுநொடி மறக்கும் எங்கள் தேவை! பட்டிகாணா தீனி போட்ட தெய்வம்....கெட்டபின்னே  நான் ஞானம் பெற்றேன்  என்ன லாபம்? அவள் வாழ்ந்த காலம் .....பாசம் காட்டத் தெரியா பாவியாய் நான் வாழ்ந்தென்ன லாபம்! எப்படி வாழ்ந்தாலும் தாங்கிக் கொள்ளும் பூமியைப் போல.....ஏற்றுக் கொண்ட உதாரண அன்னை! அவள் படிக்காத சரசுவதி! எனினும் படித்தவர்களுக்கே பாடம் எடுக்க தகுதிபெற்றவள்! எங்களைப் பெற்றவள்!தந்தையின் சொற்ப வருமானத்திலும், அரிசிக்கே பஞ்சம் வந்த காலத்திலும், இத்தனை உயிர்களையும் காத்து......நல்லதங்காளை........ஞாபகப் படுத்தாத ஒரு  ஜென்மம்! தாயே......பத்துத் திங்கள் சுமந்த உனக்கு........ஒரு பத்தே நிமிடம் மீண்டும் தாய் மடியேங்கும் .....எ
ன் மனக்குரலோசைக்  கேட்கவில்லையா! பொத்திப் பொத்தி வளர்த்தாயே......என் தாயே......இந்த ஏமாற்று உலகில்..,..தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தித் தேர்களில் வருவதென்ன! தர்மங்கள் பல்லக்கிற்குக் காத்திருந்துத் தாமதமாய் வருவது..... தெரியாமல் வளர்த்து விட்டாயோ? காணத கடவுளாய்க் காணாமல் போனாயோ! தேடிக் கிடைக்காத .....தேவதையாய் ஆனாயோ!....இருக்கும் கோயில் போதாதென்று.... இன்னொரு ( குடியிருந்த கோயில்) கோயிலாய் ஆனாயோ ! உன் புகழ் வாழ்க! உன் நினைவு தங்கவே என் உள்ளம் இருக்குதே!
[5/10, 15:52] Puvanasekar Subramaniam: அந்த ஆகாயம் சிறிதே! அவள் தியாகங்கள் பெரிதே!வெயிலைச் சுமப்பாள்! நிழலைக் கொடுப்பாள்!அம்மாவே தெய்வம்! அது ஒரு ஆகாய தீபம்!அன்னை மடியில் கண் திறந்தோம்! நம் மடியில் அவள் கண்மூடுவதென்ன நியாயம்? அவள் சுமந்த கடனுக்கா அவளை சுமந்தேன்! அதோடு விட்டேனா......பாவி......பாவி.......அன்னம் இட்டவளை அனலில் ....வேக விட.......மகனை... .....தீயிட.......சொல்ல.....அன்புப் பிள்ளையாய் அழுதே......சாய்ந்தேன்!
அவளுக்கு நிகர் அவளே! அவளே அம்மா! அவளே அன்னை! அவளே தாய்! அவளே தெய்வம்!
அவளே எல்லாம்!
அன்னையர்  தினமாம் அனைவரும் அவள் தியாகம் நினைவில் கொள்வோம்! பெண்குழந்தை பிறந்தால் உச்சமாக மகிழ்ச்சி கொள்வோம்! அவளும் அன்னையாவாள் ஒரு தினம்! அன்பின் அகராதியாவாள்! ஆண்களையும் அவளே படைப்பாள்! படைப்பவர் கடவுள்தானே! ஆனால் கருணைக் கடவுள்! சோகம் சுமந்தாலும் கண்ணில் இனிப்பாள்! அகரம் அறியாவிடினும் சிகரம் அவளே!
சந்திரன் சூரியன் மறையலாம், சரித்திரம் புரண்டு படுக்கலாம்! தாய்மை மட்டும் இல்லாது போனால்....பூமி இயக்கம் இல்லையே! சுமப்பதே சுகமாக நினைக்கும் ஒரு  ஜீவன்! கர்ப்பம் தாங்கும் பத்துத் திங்கள் கருவில் சுமந்தே வாழ்பவள்! காடு சென்று சேரும் வரை நெஞ்சில் சுமப்பவளும் அவளே!பஞ்சு மெத்தையும் பட்டு விரிப்பும் .....அன்னைமடிக்கு ஈடாகுமா?தாயின் கைகள் கோதும் இன்பம் அறியாதவனே.....தென்றல் வருடுவதும் மலர்கள் தீண்டுவதும் புகழ் பாடுவான்!கந்தல் சேலை அணிந்தாலும் அவளே உனக்குக் கலைவாணி! கஞ்சி கரைத்துக் கொடுத்தாலும் அவளே உனக்கு மகராணி!கடவுள் இல்லை என்பவனைக் கேட்டுப்பார்.......தாயே கடவுள்  என்றே சத்தியம் செய்வான்! வாழ்க தாய்மை! வளர்க தாய்க்குலம்!

- அன்னையர் தின அன்பு காணிக்கை( கா.ம.க)

தாய்மடியில் உறங்கும் சேய்! சேலை முனைப்பால்  காற்றைத் தடுப்பாள்......காயம்படுமோ.....என்றே! அவளே அம்மா!
HAPPY MOTHERS DAY!🙏! !!    வாழ்க!

சனி, 9 மே, 2015

பிள்ளை கொடுப்பினை!

[5/9, 17:29] Puvanasekar Subramaniam: மரணப்படுக்கையில் புற்றுநோய் கண்டு , விவாகரத்தாகியக் கணவன்.தன் பிள்ளைகளை கடைசியாகக் காண விழைகிறான்.மனைவி அனுப்ப மறுக்கிறாள்! ...........இந்த சூழலில் கணவன் மனநிலைக்கு......ஒரு......கவிதையாக.....(ஆசான்G க.கா.கம்பனுக்கு நன்றி! )

ஆழமான அறிவு கொண்ட பெண்ணே.....என் நீளமான பெயர் உனக்கு நினைவில் உள்ளதா?
இடையில் வந்த காலம் நம்மை இரண்டு செய்தது! இந்தக் கடைசி நேரக்கடிதம் எந்தன் உயிர் சுமந்தது! மரணம் எனும் பாம்பு என்னுள் புற்று வைத்தது! பிள்ளை வரட்டும் என்றே உயிரில் கொஞ்சம் விட்டு வைத்தது! கருகிப்போனபோதும் உந்தன் கணவன் இல்லையா! மரணம் காட்டும் கருணை கூட உனக்கு இல்லையா? கடைசி ஆசை என்னவென்று கைதி சொல்லலாம், கடைசி ஆசை கணவன் சொல்ல உரிமை இல்லையா! நீதிமன்றம் செல்ல எனக்கு நேரம் இல்லையே! இந்த சேதி கண்டும் உந்தன் கண்ணில் ஈரம் இல்லையே! உலக வாழ்வும் உறவும் இங்கே அழகுப் பொய்யடி! என் சலவை செய்த நிலவிரண்டைஅனுப்பிவையடி!
[5/9, 22:46] Puvanasekar Subramaniam: நெஞ்சுக்கூட்டில் இழுக்கும் ஜீவன் நிறைவு காணட்டும்! அது பிஞ்சுப் பூக்கள் பார்த்த பின்பு பிரிந்து போகட்டும்! இறந்த காலம் மீண்டும் எனக்கு இருந்தால் நிம்மதி! பறந்து போனக் கிளியே என்னைப் பார்க்க அனுமதி! சின்னச் சின்ன ஓசைக் கேட்டு சிலிர்த்துக் கொள்கிறேன்!என் வண்ணப்பூக்கள் வந்ததென்று வாரி எழுகிறேன்! கண்டதெல்லாம் கனவு என்று கவிழ்ந்து கொள்கிறேன்!என் கண்ணீர் மட்டும் உண்மை என்று கண்டு கொள்கிறேன்! கொண்ட குழந்தையோடு எனக்குப் பங்கு இல்லையா? அது ரெண்டு ஜீவன் சேர்ந்து செய்த பொம்மை அல்லவா! புற்று நோய்க்கு மருந்து கண்டு போட்டுக் கொள்கிறேன்!நெஞ்சின் பற்றருக்க மருந்து காண காத்திருக்கிறேன்!
வட்ட நிலவு ரெண்டு வருமா என எட்டிப் பார்க்கிறேன்! என் கட்டிலோடு  உயிரை இன்னும் கட்டி வைக்கிறேன்!
இருக்கும்போதே பிள்ளை காண கொடுத்து வைக்கல்ல! நான் இதுவரைக்கும் செஞ்ச பாவம் விட்டுக் கொடுக்கல்ல!
இறந்த காலக் காயமெல்லாம் இன்றே ஆறட்டும்! என் மரணம் மட்டும் மென்மையாக நிகழ்ந்து போகட்டும்!....போய்வருகிறேன் ! மன்னிக்கவும்.........போகி.....றே...ன்....!

புதன், 6 மே, 2015

ஒரு தலை சோகம்!

ஆசான் கள்ளிக் காட்டுக்  கம்பனே வாழ்க!

அவன் வாழ்வில் .....போட்டி போட்டு வளர்வது...தாடியும், சோகமும்!அவளின் ஞாபகம், அவனின் சுவாசம்!பன்னிரண்டு பாலைவன  ஆண்டுகளுக்குப் பின் அவளை அவன் கண்டான்!நள்ளிரவில் ரயில் நிலையத்தில் எதிரெதிரே செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொண்ட இடைவெளியில். எதிரெதிர் பெட்டிகளில் பழைய நான்கு கண்கள் நான்கு பார்த்துக் கொண்டதென்னவோ புதிதாக!
அப்போது மனசில் எத்தனை மௌன பூகம்பம்!

அன்பே, உன்னைப் பார்த்த நேரம் என் இமைகளைத் தொலைத்தன கண்கள்!நான் காண்பது உண்மையா? நனவா? பாழ்பட்ட மனம் முழுதும் பட்டாம் பூச்சி பறக்க விட்டது யார்? இதய ஆழ்கடலில் மூழ்கிய  உன் முகம் ஒரே நொடியில் மேலெழும்பச் செய்தது யார்? பல வருடம் வழிந்தோடியும் என் நெஞ்சைப் பிழியும் உன் அதே பார்வை! என் இனிய பழையவளே! என் கனவில் அலையும் ஒற்றை மேகமே!உன் நினைவில் நான் இருக்கிறேனா? என் மீசைக்கும் காதலுக்கும் ஒரே வயதென்றாவது அறிவாயா! உன்னை மறக்கும் தூக்க மாத்திரை இதுவரை இல்லையே!

உன்னிலும் மாற்றம் காண்கிறேன்: உன் அழகான புருவ  அடர்த்திக் கொஞ்சம் குறைந்திருக்கிறது. உன் சிவப்பு கொஞ்சம் சிதைந்திருக்கிறது! ஆனால் உன் இதழ் மட்டும் அதே பழைய பவளச் சிவப்பு!
       இப்போதும் நாம் பேசப் போவதில்லையா? வார்த்தைகள் கொள்ளையாய் இருந்த போதே பேசாமல் பிரிந்தவர்கள், ஊமையான பிறகு சந்தித்து என்ன லாபம்! உன் நினைவுகள் கணவனைப் போலவே உறங்கி இருக்கலாம்! ஆனால் என் நினைவுகள் உன்னைப் போலவே விழித்திருக்கின்றன!இதோ விசில் சத்தம் .நம்மில் ஒரு ரயில் கிளம்பவிருக்கிறது! ஐயகோ! இந்த ரயில் வெளிச்சம் ...நீ கண்ணீர் விடுவதைக் காட்டி விட்டதே! வேண்டாம் கண்ணே...விழியில் வழியும் வேந்நீர் பட்டு...மடியில் உறங்கும் கணவரின் கனவைக்  கலைக்காதே!

நான் போய்வருகிறேதன் அல்லது போய்வா! மீண்டும் சந்திப்போம்! என்னைப் போல் விதியை விடவும் ரயிலை நம்பு!

அப்படியென்றால்  நீயும் என்னைக் காதலித்தாயா?
நன்றி!

ஞாயிறு, 3 மே, 2015

குழந்தை எனும் மழலை

சங்கத் தமிழ்ச் சபைக்கு, என் பிள்ளைத் தமிழ் வணக்கங்கள்! மழை மழையாய்த் தமிழ் பொழியும் சான்றோர்கள் முன்னிலையில், ஒரு மழலை மொழியாக நின்று கொண்டிருக்கிறேன்! கவிதை மனம் கொண்டுவந்த அவையினருக்கும், ஒரு அலைவரிசையாக மட்டும் இயங்காமல், தமிழ்க் கலைவரிசையாக விளங்கும் ஸ்டார் விஜய் நிறுவனத்திற்கும் நேயர்களுக்கும்
மேலும் படிக்க »