மனிதர்களோடு மட்டுமல்லாமல் அக்றிணையோடு பேசுபவன் பைத்தியக்காரன் மட்டுமல்ல, அது ஒரு ரசனைக்குரிய கவிஞனாகவும் இருக்கலாம்! அவன் நிலவோடு பேசுவான். சூரியனை சண்டைக்கு இழுப்பான்.வானத்தோடு வாதிடுவான்! மேகத்திற்கு தூது விடுவான்! விண்மீன்களோடு விளையாடுவான் ,நதியோடு உரையாடுவான்! இதோ, நதியிடம் கேள்வி கேட்டபடி கவிஞன் ஒருவன் நதிக்கரை ஓரமாக நடந்து செல்கிறான்.நதியும் அவனோடு உரையாடியபடி ஓடிச் செல்கிறது.
பாறைகளுள் நுழைந்துப் பயணப்படும் அந்த நநி அவனோடு பரிபாஷைப் பேசிக் குலவுகிறது!வேதாளம் சொல்லும் கதைக்குப் பதிலை விக்ரமாதித்தன் கூறுவதைப் போல, பாதாளத்தில் பரவும் நதி, அவனுக்கு பதில் சொல்லியபடி விரைந்து செல்கிறது! பதில் கேட்டுக் கவிஞன் உறைந்து போகிறான்:
நதியோடு உரையாட விழைந்து நதியைப் பார்த்துக் கொஞ்சம் நில் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்!
.உனக்கு பதில் சொல்ல...நான் நின்றால் என் பெயர் நதி ஆகாது! சரி.... உன்னோடு கரையில் ஓடிக்கொண்டே கேட்கிறேன் சொல்....நதியே...சொல்......நீ இன்பப்படும்படியான நிமிஷம் எது ? எப்போது உன் ஆன்மா...ஈரம் கொள்கிறது?மலைகளின் மனங்களில் சுரந்து, காடுகளின் நடுவே கால்கள் நனைத்தபடி ,பாறைகளின் பொந்துகளில் பதவிசாகப் புகுந்து சலசலவென்று சங்கீதம் பாடிக்கொண்டே செல்லும்போதா? மலைகளின் மர்ம இடுக்குகளில் சிருங்காரமாக சினுங்குகிறாயே, அப்போதா?காடு தாண்டி வந்ததினால் கால்களுக்கும் உனக்கும் , தாழ்ந்த கிளைகள் தடவிக்கொடுத்து, வருடியபடி ஒத்தடம் கொடுக்கிறதே அப்போதா?
திருப்பங்கள் கண்டால் சலங்கை கட்டி தில்லானா பாடுவாயே! அப்போதா? நீ பெண்பால் என்று புரிந்துகொண்ட கிளைகள் பூத்தூவுகிறதே,அப்போதா?உனக்கே தெரியாமல் காற்று உன்னுள் புகுந்து உனக்கு கிச்சுக்கிச்சு மூட்டுமே , அப்போதா? நடந்தபடியும், ஓடிக்கொண்டும் இருக்கும் நீ ,அருவியாக விஸ்வரூபம் எடுப்பாயே, அப்போதா?அரைஞான் கயிரோடும், கோமணத்தோடும் நம் பாமரச் சிறார்கள் உன் மீது குதித்து உன்னை குதூகலப் படுத்தும் போதா?நதியோரம் எம்குலப் பெண்கள் குளிக்கும் போது அங்கம் நனைப்பதில் புளாங்கிதம் கொள்வாயே அப்போதா?
நதிசட்டென்றே நின்றது, கவிஞன் கேட்ட கேள்விகளில் உடன்பாடு இல்லை போலும்! மனிதனாய்ப் பார்! கேள்! எனது இன்பமான தருணம் எப்போதா? சொல்கிறேன், கேள்: மனிதன் வேர்வையோடு நானும் சேர்ந்து வயல்களில் பயிர்கள் வேர் நனைப்பேனே , அப்போது! வெள்ளிக் குடமானால் என்ன, மண் பானையானால் என்ன, பாகு பாடு பாராமல் நீர் நிரப்புகிறேனே, அப்போது.....! வியந்தேன்....நதியில் குதித்தேன்...குளித்தேன்! இது ஞானக்குளியல் அல்லவா...!