காட்டுப்பாக்கன் பட்டி
கண்ணிமை கவிழும் போதும், கனவுகள் தவழும் போதும்! என்னைத் தொலைத்துவிட்டு, நானே தேடும்போதும்!
என்னைப் பிழியுதம்மா எந்தன் ஊர் ஞாபகங்கள் ! குளமில்லை! கோயிலுமில்லை! வனமில்லை! வளமுமில்லை! வளர்ந்த ஊர்
ஒன்றைத் தவிர, வரலாறும் அதற்கு இல்லை! இருந்தாலும் மனசுக்குள்ளே, நினைக்கும்போதே ஏனிந்த பட்டாம் பூச்சி !
இளமையின் கல்வெட்டாக , இந்த இறந்த நாள் ஞாபகங்கள் !
சிறகு முளைக்கும் முன்பே, பறவையாய்ப் பறந்த அந்த நாட்கள்!இப்போது சிறகிருந்தால் அத்திசைத் தேடிப் பறப்பேன்! வரப்பிலே படுத்தபடி வசதியாய் நானழுவேன் ! என்னைப் பிரசவித்த அந்தப்
பிரதேசம் அதைவிரலில் தொட்டுக் கண்ணில் ஒத்துவேன்!
ஓடி நான் மகிழ்ந்த ஓடையில் குதிப்பேன்! தேடிப் பிடித்தே தென்னையில் ஏறுவேன் ! பாதையில் நடந்தே பாடி மகிழ்வேன்!
அறிமுகம் செய்த அந்தியை ரசிப்பேன்! நலம் விசாரிக்க நிலவை நாடுவேன்! வெட்ட வெளியின் விந்தைகள் வியப்பேன்! சிந்தனை முளைத்தது அங்கே! சிந்தை மங்கியது இங்கே!
அருமையை வாழ்வில் உணர்த்திய என் மக்கள் , வறுமையில் வாழ்வதைக் கண்டு நெருஞ்சிமுள் தைக்குதே என் நெஞ்சை!
சொல்லாத கவிதை நான் சொல்லி முடித்த பின்னும் , ஏதோ ஒன்று
பிசையுதே நெஞ்சை! உள்ளூரும் எண்ணம் எல்லாம் உணர்வாக வடித்த பின்னே, ஒன்று மட்டும் தெளிவாய் என்னுள் கண்டேன்! தள்ளாத வயது வந்தால்....தாய் மண்ணே தாயாய்க்காண்பேன்!
கட்டடா மகனே என்பேன் ! கல்லறை என் பிறந்த மண்ணில் !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு