கூடும்! வீடும்!
சாலையோரம் கட்டிக் கொண்ட ஒரு குடிசை வீடு அரசாங்க அதிகாரிகளால் இடிக்க இருப்பது கண்டுஇதயம் சிதறிப் புலம்புகிறாள் ஒரு ஏழைக் குடும்பத்தலைவி!அந்தத் தாயின் மொழியிலேயே அவலம் அரங்கேறுகிறது!அவள் வட்டார வழக்கில் கொட்டாரம் அடிக்கும் அந்தக் கவிதையைக் கேளுங்கள்! ஏலே! தொரச்சாமி எங்கடா உங்கப்பன்?கள்ளுக் கடைக்குப் போயிருப்பான்!கையோட கூட்டியாடா! வீட்டை இடிக்கிறாஹ! வெறப்பாஹ நிக்கிராஹ! ஓட்டப் பிரிக்கிராஹ! ஓடிப்போய்க் கூட்டியாடா!சாமிகளா! சாமிகளா! சர்க்காரு சாமிஹளா! சிலந்திக் கூடழிக்க சீட்டு வாங்கி வந்திஹளா?சித்தெரும்ப நசுக்கத்தான் ஜீப்பு ஏறி வந்திஹளா? அரைச் சென்டு வீடிடிக்க ஆர்டர் வாங்கி வந்திஹளா? வெள்ளாட்டுக் காம்பினிலே விஷம் வடியக் கனாக் கண்டேன்! ஓடையெல்லாம் ரத்தம் ஓடிவரக் கனாக்கண்டேன்! காத்துக் கறுப்பாச்சே! கண்ட கனா பலிச்சிடுச்சே! எள்ளுச்செடி மேல இடி வந்து விழுந்துடுச்சே!புல்லெடுக்கப் போன மூத்தவளக் காணலியே!ஏழாவது படிக்கப் போன இளையவளும் திரும்பலியே!ஒத்தையில நானிருந்து உலைக்கரிசி போடயிலே வாய்க்கரிசி போட வந்து வாசலில நிக்கிறாஹ!எட்டி உதச்சாலே இத்து விழும் சுவருக்கு....கடப்பாரை எதுக்கு, கவர்மென்டு ஆளுகளே!நான்பட்ட பாடு,நாய் படுமா? பேய் படுமா? கடையும் தயிர் படுமா?காஞ்சிபுரம் தறி படுமா ? முன் சுவரு எழுப்பத்தான் மூக்குத்தி அடகு வெச்சன்! பித்தளை குடம் வித்து பின் சுவரு எழுப்பி வெச்சன்!மரக்கதவு செஞ்சு மாட்ட காசில்ல ராசாவே! கோணியில கதவு செஞ்சு கோட்டைக்கு மாட்டி வெச்சன்! சீட்டுப் புடிச்சு வெச்சு, சித்தாளு வேலை செஞ்சு ஓட்டைக் கூரைக்கு ஒரு பகுதி ஓடு வெச்சன்!கூடு கலைச்சாக்கா குருவிக்கு வேற மரம்! வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது எடம்!ஐயா எசமானே! அஞ்சு வெரல் மோதிரமே! பாருமய்யா கண் திறந்து! தண்ணீ புடுச்சு வெக்க தகரக் கொடம் ஒண்ணிருக்கு! வீட்டை விட வயசான வெளக்கமாறு ஒண்ணிருக்கு! பத்த வெச்சு பத்து தேச்ச பாத்திரமோ ரெண்டிருக்கு! எம்புருசன் திங்க மட்டும் எவர்சில்வர் தட்டிருக்கு!போங்கய்யா போங்க நீங்க! புண்ணியமாப் போகட்டும்! என் வீட்டு நாய்க்குட்டி இன்னைக்கும் தூங்கட்டும்! அழுதாலும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது! அருகம்புல் புத்தி சொல்லி அருவா கேக்காது! இடிங்கய்யா இடிங்க! இத்த வீடுதான் இடிங்க! கூரையப் பிச்செரிங்க!கொடியெல்லாம் அறுத்தெரிங்க! கண்ணாடிக் கடைக்குள்ள காட்டு யானை புகுந்தது போல் முன்னாடி பின்னாடி முழுசா நொறுக்கிருங்க! கடைசியில ஒண்ணு மட்டும் கால் பிடிச்சு கேக்கிறேன் ஐயா!சிகரெட்டு பிடிப்பவரே செவிசாச்சு கேளுமய்யா!கொல்லையில எம்மகதான் மல்லிகைய நட்டு வச்சா!நீர் குடிச்ச அந்த செடி வேர் புடுச்சு நின்னிருக்கு!பூப்பூக்கும் முன்னால கத்தி எறியாதீக! கடப்பாரையும் வீசாதீக! ஆசையில வெச்சக் கொடி, அசங்காம இருக்கட்டும்! அவ வெச்ச மல்லிகைதான்.....எவளுச்கோ......பூக்கட்டும்....!!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு