வியாழன், 2 ஏப்ரல், 2015

சிறகும் சிறுமியும்

சிறகும் சிறுமியும் :

திடீரென்று வானம் பகலில் இருண்டது. பூனை உருட்டியக் கண்ணாடிக் குடமாய் உருண்டது பூமி. மருண்டது மானுடம்! அப்போது நிகழ்ந்தது அந்த ஆச்சரியம் ! வானில் மின்னிய வெளிச்சம் நடுவே சிறகு முளைத்த தேவதைத் தோன்றினாள்.சிறகுநடுங்க தேவதை சொல்லியது...இன்னும் சிறிது நேரத்தில் உருளும் உலகப் பந்துக் கிழிந்தே அழியப் போகிறது!
என் சிறகில் ஏறமுடிபவர்களை மாற்று கிரகம் சேர்ப்பேன்! இரண்டு நிபந்தனைகளுடன் ஐவர் மட்டுமே என்னுடன் வரமுடியும்! தனக்குப் பிடித்தப் பொருள் ஒன்றுடன் வரலாம்.

புஜ வலிமையோடு வாலிபன் ஒருவன், தன்னுடன் உடைந்த வளையல் அவள் நினைவாக! அடுத்து அரசியல் வாதி , எளிமைத் தோற்றமும் சுவிஸ் வங்கிக் கணக்குடன்! இன்னும் இறந்துவிட வில்லையை இருமி நிரூபித்துக் கொண்டிருக்கும் தாத்தா, கைநிறைய மருந்தும் , அரை அவுன்ஸு உயிருடன்! அனுதாப  அலையில் கவிஞன் காமக , தோளில்  ஜோல்னாப்பை அதில் அச்சுப் பிழை அதிகம் கொண்டுஅச்சில் வந்த  அவன் முதல் கவிதையுடன்!
கடைசியில் வந்தாள் ஓர் சிறுமி, தன் செல்ல நாய்க்குட்டியுடன்
மறுத்தது தேவதை, நாய்க்குட்டி ஒரு பொருளல்ல, உயிர், அனுமதியில்லை! உடனே சிறுமி சொன்னாள்.....நாய் இருக்கட்டும்....நான் வரவில்லையென்றே!
சிறகு சிலிர்த்தாள் தேவதை! சிறகு  சிலிர்த்த வேகத்தில் சிதறியே விழுந்தனர் மற்றோர்!
சிறகடித்துப் பறந்தே சென்றாள் தேவதை........சிறுமியுடனும், அவள் செல்ல நாயுடனும் .....!!!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு