சனி, 11 ஏப்ரல், 2015

ரத்தமில்லா ராமர்கள்

முப்பத்து மூன்று கோடைகள் கண்டு முடித்தாள் அவள்!
தன் பெயரைத் திருமணப் பத்திரிகையிலேனும் அச்சில் பார்க்க ஆசைப் பட்டாள் அவள்.ஆனால் அச்சு எந்திரங்களைப் போல்
மனித மனங்களும் எந்திரங்களான அவல நிலை!
அவள் நொந்து நொந்துநூலாய்ப் போனது ஒருவேளை தன் கண்ணீர் முத்துக்களைக் கோப்பதற்குத்தானோ!
சிறு பிராயத்தில் பூக்களின் அணிவகுப்பு மரியாதையைத் தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டு கௌரவப்படுத்தியவள்!
இன்றோ, பூசூடுவது .....தான் விதவையல்ல எனக் காட்ட மட்டுமே!
முன்பெல்லாம் கனவுகாண உறங்கிய இவளுக்கு இன்று உறக்கமே கனவான கதையானது!
முன்பெல்லாம் வேடிக்கைக் காண ஜன்னல் தேடினாள்!
இன்று ஜன்னல் முன் அசைவற்று அமர்ந்து ஜன்னலுக்குத்  தானும்
ஒரு கம்பியானாள்! அவள் சிரிப்பு என்பது இதழிலிருந்து மறைந்து
ஞாபகப் பொருளானதே! பாவம்! மன்மதன் அவள்மீது எய்த மலர்க்கணைகள் யாவும் இன்று சுள்ளி விறகான நிலையேனோ!
அவள் மூச்சு வெப்பத்தில், மூக்குக் குத்தித் தங்கம் இளகுதே!
இந்த வரதட்சிணை வில்லை வளைக்கப் போவது யார் என்றே ஏங்கும் சீதையானாள்!
ராமர்களுக்கோ இன்று ரத்தமில்லை!   ஜனகனோ பாவம் சாய்வு நாற்காலியில்!
இனி சீதைகளே வில்லை ஒடித்துக் கொள்ளும் நிலை நியாயம் தானோ!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு