ஞாயிறு, 3 மே, 2015

குழந்தை எனும் மழலை

சங்கத் தமிழ்ச் சபைக்கு, என் பிள்ளைத் தமிழ் வணக்கங்கள்! மழை மழையாய்த் தமிழ் பொழியும் சான்றோர்கள் முன்னிலையில், ஒரு மழலை மொழியாக நின்று கொண்டிருக்கிறேன்! கவிதை மனம் கொண்டுவந்த அவையினருக்கும், ஒரு அலைவரிசையாக மட்டும் இயங்காமல், தமிழ்க் கலைவரிசையாக விளங்கும் ஸ்டார் விஜய் நிறுவனத்திற்கும் நேயர்களுக்கும்
என் பணிவுமிகு வணக்கங்கள்! கவியரங்கத் தலைவர் அன்று என் பிஞ்சுக் கரங்களைப் பிடித்து பொம்மைகள் கொடுத்து விளையாடச் சொன்னாய். இன்று செந்தமிழ்க் கொடுத்து விளையாடச் சொல்கிறாய் ! உன் நிறம்....அதன் வரலாறு தெரியாது இங்கு பலபேருக்கு!கம்பன் பகலெல்லாம் படிப்பான், இரவெல்லாம் படைப்பான்!கம்பன் எழுதிய அந்த இருட்டின் வாரிசாக இந்த நிறம் !உன் மீசை அதில் ஐம்பெருங்காப்பியங்களையே புதைத்து வைக்கலாம் !அந்த செந்தமிழ் மீசையை முறுக்கியபடி இரண்டு காரியங்களைத் தவறாமல் செய்கிறாய்! 25 ஆண்டுகளாய் இலக்கியத்தமிழை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறாய்! 21 ஆண்டுகளாய் உன் இரண்டு மகன்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறாய்!அவை நிறைந்திருக்கும் பெருமக்களுக்கு இந்த தமிழ்க் குழந்தையின் சிறிய வேண்டுகோள்! அடுத்த சில நிமிடங்களுங்களுக்கு நீங்கள் தவழ்ந்த காலத்திற்கே தவழ்ந்து செல்லுங்கள்!இத்தகைய சூழ்நிலையில் தொடங்குகிறது இந்தக் கவிதை:.....குழந்தை!....தொழிற்சாலைப் புகை, டீசல் வாசம்! சமைரல் எரிவாயு! புகை !இத்தனையும் கலந்துபோன காலத்தின் காற்றில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே ராகம்! உலகப் புல்வெளியில் சலசலப்பை சட்டை செய்யாமல் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு உல்லாச முயல்! இது நடமாடும் வானம்! ஒரு நரைக்காத ஞானம்! பேரரிஞர்கள் பலரும் பிழை சொல்ல விரும்பாத  ஒரு அழகான  அறியாமை!காலமும் கனவுகளும் கரைந்தே கோலி விளையாடும் காலக்கட்டத்தில் கனவு திரவத்தில் உறக்கம் கரைந்து காணாமல் போகும் சாபம்! அவரவர் துறைக்கு ஏற்றார்போல் ஆர்ப்பாட்டம் செய்யும் கனவுகள்!உலகக் கனவுக்குள் உலாப் போகலாம் வாருங்கள்!கவிஞர் பெருமகனா ....கனவைப் பாருங்கள்! ஏவுகணை உயரத்தில் ஒழுகும் பேனா!ராட்சசக் கத்தரியைத் தோளில் சுமந்தபடி உலகெங்கும் அலையும் விமர்சனக் குழு!பச்சை சுமக்கும் காணிநிலம்! பிச்சைப் பாத்திரத்தில் காண்பதோ வட்ட நிலா மட்டுமே!கல்லூரி மாணவன் கனவுகளின் கடவுள்!பார்த்து வைத்த  அழகி! அதனால் சேர்த்து வைத்த  அரியர்ஸ்!எலக்ட்ரானிக் வீச்சரிவாள் ஏந்தி ஐயனார் வடிவில் பாட புத்தகங்கள்!விண்மீன்களில் மது! சிட்டுக் குருவி வாயில் சிகரெட் !புதிய காதலிப் பக்கத்தில் பழைய காதலி!மின்விசிறிப் பக்கத்தில் ஏற்றிவைத்த தீபம் போல், கண்விசிறிப் பக்கத்தில் உறக்கம் அலைகிறது!காலத்தின் பிரம்புக்குக் கைநீட்டாமல், கனவுகள் ஓடிவந்துக் கநவு தட்டாமல்,உறக்கம் கண்களில் கட்டுப் படுவது...மழலையின் கண்ணில்தான்!கண்மணிகள் கைவிட்டு உறக்கம் அலைவது போல், உதடுகள் கைவிட்டுப் புன்னகையும் மறைந்தது!எத்தனை பேர் நாட்டில் சத்தியமாய்ச் சிரிக்கிறார்கள்? காதல் காலத்தில் கண்ணாடி முன்னிலையில் நுழைவு தேர்வு எழுதிவிட்டு உதடு புகும் சிரிப்பு!இலக்கணம் படித்தெழுதிய கவிதை போல் சிரிப்பும் பலர் மத்தியில் சிரிப்பில் இலக்கணமாய் நகைக்கும் ஜீவன் ...குழந்தை! குழந்தைக்குக் கட்சியில்லை! எனினும் இந்த  உலகமே தன் ஆட்சியின் கீழ் இருப்பதாக அது மகிழ்கிறது! குழந்தைக்கு ஜாதியில்லை ! மானிட தேகங்களின் ரத்தச்சிவப்பையும் ரோஜா மலர்களின் இதழ் சுத்தச் சிவப்பையும் ஒன்றாகப் பார்க்கும் ஒரே ஜாதி குழந்தை ஜாதி ! குழந்தைக்காக யாரும் இங்கே வாதமிடத் தேவையில்லை! சில வேண்டுதல் வெளியிட்டு விளையாடி முடிக்கின்றேன்!பிறந்தக் குழந்தையின் பாதப் பிரதேசமாய் இந்த பூமிப்பிரதேசம் மென்மை கொள்ளட்டும்!பூங்காப் புல்வெளியில் விளையாடும் சிறு பிள்ளைத் தலைமேல் விழுந்த ஒரு மஞ்சள்ப் பூவைக்  கையிலெடுத்து அழகு பார்ப்பதைப் போல் சமத்துவத்தின் கைகளுக்குள் இந்த சமுதாயம் அழகுறட்டும் ! வாழ்க தமிழ்! வெல்க நாடு! ........நன்றி!......வணக்கம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு