புதன், 6 மே, 2015

ஒரு தலை சோகம்!

ஆசான் கள்ளிக் காட்டுக்  கம்பனே வாழ்க!

அவன் வாழ்வில் .....போட்டி போட்டு வளர்வது...தாடியும், சோகமும்!அவளின் ஞாபகம், அவனின் சுவாசம்!பன்னிரண்டு பாலைவன  ஆண்டுகளுக்குப் பின் அவளை அவன் கண்டான்!நள்ளிரவில் ரயில் நிலையத்தில் எதிரெதிரே செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொண்ட இடைவெளியில். எதிரெதிர் பெட்டிகளில் பழைய நான்கு கண்கள் நான்கு பார்த்துக் கொண்டதென்னவோ புதிதாக!
அப்போது மனசில் எத்தனை மௌன பூகம்பம்!

அன்பே, உன்னைப் பார்த்த நேரம் என் இமைகளைத் தொலைத்தன கண்கள்!நான் காண்பது உண்மையா? நனவா? பாழ்பட்ட மனம் முழுதும் பட்டாம் பூச்சி பறக்க விட்டது யார்? இதய ஆழ்கடலில் மூழ்கிய  உன் முகம் ஒரே நொடியில் மேலெழும்பச் செய்தது யார்? பல வருடம் வழிந்தோடியும் என் நெஞ்சைப் பிழியும் உன் அதே பார்வை! என் இனிய பழையவளே! என் கனவில் அலையும் ஒற்றை மேகமே!உன் நினைவில் நான் இருக்கிறேனா? என் மீசைக்கும் காதலுக்கும் ஒரே வயதென்றாவது அறிவாயா! உன்னை மறக்கும் தூக்க மாத்திரை இதுவரை இல்லையே!

உன்னிலும் மாற்றம் காண்கிறேன்: உன் அழகான புருவ  அடர்த்திக் கொஞ்சம் குறைந்திருக்கிறது. உன் சிவப்பு கொஞ்சம் சிதைந்திருக்கிறது! ஆனால் உன் இதழ் மட்டும் அதே பழைய பவளச் சிவப்பு!
       இப்போதும் நாம் பேசப் போவதில்லையா? வார்த்தைகள் கொள்ளையாய் இருந்த போதே பேசாமல் பிரிந்தவர்கள், ஊமையான பிறகு சந்தித்து என்ன லாபம்! உன் நினைவுகள் கணவனைப் போலவே உறங்கி இருக்கலாம்! ஆனால் என் நினைவுகள் உன்னைப் போலவே விழித்திருக்கின்றன!இதோ விசில் சத்தம் .நம்மில் ஒரு ரயில் கிளம்பவிருக்கிறது! ஐயகோ! இந்த ரயில் வெளிச்சம் ...நீ கண்ணீர் விடுவதைக் காட்டி விட்டதே! வேண்டாம் கண்ணே...விழியில் வழியும் வேந்நீர் பட்டு...மடியில் உறங்கும் கணவரின் கனவைக்  கலைக்காதே!

நான் போய்வருகிறேதன் அல்லது போய்வா! மீண்டும் சந்திப்போம்! என்னைப் போல் விதியை விடவும் ரயிலை நம்பு!

அப்படியென்றால்  நீயும் என்னைக் காதலித்தாயா?
நன்றி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு