புதன், 27 மே, 2015

மறக்கமுடியா மழைக்காலம் !

#
மறக்கமுடியா……மழைக் காலம்!
( கவிதையும் காதலும் இரட்டைப் பிறவிகள்)

அது ஒரு காலம் கண்ணே……கார்காலம்!
நனைந்தபடி நடந்து கொண்டே சென்றோம்! எதிரில் ஒரு மரம் கண்டோம் ! அது அப்போது மும்முரமாக  தண்ணீர் விழுதுகளைத் தரைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது! இருந்தும் அந்த ஒழுகும் குடையின் கீழ் ஒதுங்கினோம்!அந்த மரம் …நம் வரவிற்குக் காத்திருந்தது போல …உதிரிப் பூக்களைத் தூவி நம்மை வரவேற்றது!இலைகளும் …தன் பங்கிற்கு……சேமித்து வைத்திருந்தத் தண்ணீர்க் காசுகளை…நமக்காக செலவழித்தன! நீர்த்திவலைகள் …ஒத்தையடிப்பாதையாக…உன் நேர்வகிட்டில்…ஓடிக் கொண்டிருந்தன! உன் சம்மதமின்றி நான் ரசித்து அந்தக் காட்சி! அந்தி மழைக்கு நன்றி!
நம் இருவர்கிடையே இருந்த இடைவெளியில் …நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது!

எவ்வளவோ பேச எண்ணி(னோம்) னேன்!ஆனால் வார்த்தைகள் போகும் பாதையெங்கும்…மௌனம் எனும் பசை தடவியிருந்தது!
உன் முகத்தில் பனித்துளியாக ஆவல் கொண்ட நீர்த்துளிகள்…உன் நெற்றியில் பட்டுத் தெறித்ததையும் ரசித்தேன்!உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு என் கைக்குட்டையை நீட்டினேன்!அதில் உன் நெற்றியை ஒற்றி…திருப்பிக் கொடுத்தாய்!ஏதோ ஒரு துணிச்சலோடு நான் கேட்டேன்! " இந்தக் கைக்குட்டைஉலராமல் இருக்க …நான் என்ன செய்ய வேண்டும்?"
நீ சிரித்தபடி சொன்னாய்" ஒன்றும் செய்யக் கூடாது" என்றபோது……வெளியில் நின்ற மழை என் மனதின் உள்ளே பெய்தது!

அது ஒரு மறக்கமுடியாத மழைக் காலம்!
அது ஒரு காலம் கண்ணே……கார்காலம்!!  #

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு