வெள்ளி, 4 நவம்பர், 2016

*ஏன் கவிதை ?*:
எல்லா உயிர்களுக்கும்,எப்பொழுதும் வாழ்க்கையென்பது,புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை!
பாசிபடர்ந்த குளம் நடுவே பூத்திருக்கும் வசீகரித் தாமரையே வாழ்க்கை! பாசிவிலக்கி வாழ்வின் வசீகரம் கண்டறிந்து,சலிப்பைத் தவிர்த்து வியக்கச் சொல்கிறது கவிதை!மனதகுலம் பயன்படுத்தித் தேய்ந்த வார்த்தைகள் கவிஞனுக்குப் போதுமானதாக இல்லை!ஆகவே,கைக்குச் சிக்கிய கருப்பு வெள்ளை வார்த்தைகளுக்கு வர்ணமடித்துப் பார்க்கிறான் !தேன்குழைத்த மருந்தாக,நிறம் குழைத்த வார்த்தைகள் மொழிக்கு அழகு கூட்டுகிறது !
வாழ்க்கையை ....ஒரு குழந்தை கண் கொண்டு காணவும்,ஒரு ஞானியின் மனம் கொண்டு வாழவும் ..கற்றுக் கொடுக்கும் கவிதை !காலம் காட்டும் இருளையும்...இருள் என்பது ஒரு குறைந்த ஒளி என்றே உன்னை ஊக்குவிக்கும் கவிதை!
முக்கியமாய்க் கவிதைகள் எல்லோருக்காகவும் படைக்கப் பட்டாலும்....அது எல்லோராலும் புரிந்து கொள்ளப் படுவதில்லை !புறமனது மட்டும் கொண்டு வடிக்கப் படுவதில்லை கவிதை!
அகமனதின் பல்வேறு அடுக்குகளில் சஞ்சரித்துப் படைக்கப் பட்டவைகளை...அந்த அடுக்குகளில் சஞ்சரிக்கத் தெரிந்தவர்களால் ரசிக்கப் படுகிறது ! வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு ...தூரங்களும்,இதயங்களும் சுருங்கிப்போன இந்த யுகத்தில் ....நழுவிக்கொண்டிருக்கும் மனிதத்தை இறுக்கிப் பிடித்து நம்பிக்கையூட்டுவன கவிதைகள்!
இனி வரும் மழையில் நனைந்து பார்க்க....இனி மலரப் போகும் மலர்களில் மனம் கரைய.....வானவில் ரசிக்க.....வாழ்வின் வலி தாங்க.....புயலையும்,பூகம்பத்தையும் எதிர்கொள்ள.....சகஉயிர்களை நேசிக்க......சேமித்தக் கண்ணீரை அன்புக்கு செலவழிக்கக் கற்றுத் தருமே...... இந்தக்.....கவிதைகள் !!!

செவ்வாய், 1 நவம்பர், 2016

காதல் முதல் கல்யாணம் வரை :

கம்மா கரையோரம் களை எடுக்கும் வேளையிலே,கறுப்புக் கொடப்புடிச்சு கரையோரம் போனவனே !அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலியே ! போனது தான் போன, எம் மனசையும் ஏங்கொண்டுபோன ?
போகிற போக்குல ஒரு புஞ்சிரிப்பு ஏஞ்சிரிச்ச ?உயிர்கசக்கி வேரோட புடிங்கி என்ன ,வெயில் தரயில ஏம்போட்ட?
காசநோய்க்காரிகளே கண்ணுறங்கும் வேளையில,ஆசநோய் வந்தமக அரநிமிசம் தூங்கலியே! ஒறங்காதக் கண்ணுறங்க உபாயம் ஒண்ணு உள்ளதய்யா,அழகா,நான் ஒறங்க ஒம்ம அழுக்கு வேட்டி போதுமய்யா! ( த்.....தூ....!...)
தைலந்தான் தேச்சுவச்சேன் ,தலவலியோ தீரலியே ! தலவலியும் தீரவழி ஒண்ணு உள்ளதய்யா!நீ வச்ச தலையணைய நான் வச்சா,தீருமய்யா! ( அய்ய....கருமம் ....! )
சோறுதண்ணி கொள்ள ஒரு சுருக்குவழி உள்ளதய்யா! நீ வந்து எங்கஞ்சிய எச்சிபண்ணி...தாருமய்யா ! ( ச்சீ......வெவஸ்தயில்லாத ஜன்மப்பா.....)
.........இந்தவகைக் கூத்தெல்லாம் ஒரேடியா முறியடிக்க...வேணும் ஒரு திருமணமப்பா !

பிரச்சினைகள் இல்லாவிட்டால் அவன் *மனிதன்* இல்லை!
கடிந்து கொள்ளாவிட்டால் இல்லாவிட்டால் அவன் *கணவன்* இல்லை!
சண்டைகள் போடாவிட்டால் அவர்கள் *கணவன் மனைவி* இல்லை!
 அன்பைப் பொழியாவிட்டால் அவர்கள் *பெற்றோர்* இல்லை!
தொல்லை தராவிட்டால் அவர்கள் *பிள்ளைகள்* இல்லை!
நம்மைப் புரிந்து கொண்டால் அவர்கள் *உறவினர்* இல்லை!
நம்மைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் *நண்பர்கள்* இல்லை!

மனிதனைக் கஷ்டப் படுத்தாவிட்டால் அவன் *கடவுள்* இல்லவே இல்லை!

சொல்லதிகாரம் :

- தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தை " ஆராரோ "மற்றும்" சனியனே "
- வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தை " உருப்போடு "மற்றும்" உருப்படமாட்ட "
- மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தை "சவால் விடுகிறேன் " மற்றும்" வாக்குறுதி "
- ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தை "போய்ச் சேர்ந்து போன்போடு "
- தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தை " அய்யா குளிக்கிறார் "
- மருத்துவ மனை அதிகம் கேட்ட வார்த்தை " இனி ஆண்டவன் விட்ட வழி "
- " கடைசியாய் எல்லோரும் முகம் பார்த்துக் கொள்ளுங்கள் "- மயானம் அதிகம் கேட்ட வார்த்தை .

போதுமடா சாமி!

இனி ஒவ்வொரு சொல்லையும் ஒட்டடை தட்டுவோம் !அத்தனை சொல்லிலும் ஆக்ஸிஜன் ஏற்றுவோம் !
வார்த்தை மாறினால் , வாழ்க்கை மாறும் !
வாழ்வின் நீள அகலம் கருதி , வார்த்தைகளில் மழித்தல் நீட்டல் செய்வோம் !

தோல்வி என்பதை .....விலகி நிற்கும் வெற்றி,என்றுரைப்போம் !
எதிரியை....தூரத்து நன்பனாக்கலாம் !
இலைகள் கழிந்த கிளைகள் கண்டால் ...அடுத்த வசந்தம் ஆரம்பம்,எனலாம் !உடல் நலம் குன்றும் சமயம்...உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம் !
வெள்ளைச் சட்டையில் மைத்துளி பட்டால்......மையைச் சுற்றி வெண்மை என்போம் !
நிலவைத் தொலைத்த வானம் என்பதை .... நட்சத்திரம் முளைத்த விண்வெளி என்போம் !
எதிர்மறை வார்த்தைகள் உதிர்ந்து போகட்டும்!
உடன்பாட்டு மொழிகள் உயிர் கொண்டெழட்டும் !
பழைய வார்த்தைப் பறித்துப் பறித்துப் புதிய நிலத்தில் பதியன் போடுவோம் !

புளித்த வார்த்தைகள் மாறும் போது.....சலித்த வாழ்க்கை......சட்டென  மாறும்!