செவ்வாய், 1 நவம்பர், 2016

சொல்லதிகாரம் :

- தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தை " ஆராரோ "மற்றும்" சனியனே "
- வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தை " உருப்போடு "மற்றும்" உருப்படமாட்ட "
- மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தை "சவால் விடுகிறேன் " மற்றும்" வாக்குறுதி "
- ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தை "போய்ச் சேர்ந்து போன்போடு "
- தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தை " அய்யா குளிக்கிறார் "
- மருத்துவ மனை அதிகம் கேட்ட வார்த்தை " இனி ஆண்டவன் விட்ட வழி "
- " கடைசியாய் எல்லோரும் முகம் பார்த்துக் கொள்ளுங்கள் "- மயானம் அதிகம் கேட்ட வார்த்தை .

போதுமடா சாமி!

இனி ஒவ்வொரு சொல்லையும் ஒட்டடை தட்டுவோம் !அத்தனை சொல்லிலும் ஆக்ஸிஜன் ஏற்றுவோம் !
வார்த்தை மாறினால் , வாழ்க்கை மாறும் !
வாழ்வின் நீள அகலம் கருதி , வார்த்தைகளில் மழித்தல் நீட்டல் செய்வோம் !

தோல்வி என்பதை .....விலகி நிற்கும் வெற்றி,என்றுரைப்போம் !
எதிரியை....தூரத்து நன்பனாக்கலாம் !
இலைகள் கழிந்த கிளைகள் கண்டால் ...அடுத்த வசந்தம் ஆரம்பம்,எனலாம் !உடல் நலம் குன்றும் சமயம்...உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம் !
வெள்ளைச் சட்டையில் மைத்துளி பட்டால்......மையைச் சுற்றி வெண்மை என்போம் !
நிலவைத் தொலைத்த வானம் என்பதை .... நட்சத்திரம் முளைத்த விண்வெளி என்போம் !
எதிர்மறை வார்த்தைகள் உதிர்ந்து போகட்டும்!
உடன்பாட்டு மொழிகள் உயிர் கொண்டெழட்டும் !
பழைய வார்த்தைப் பறித்துப் பறித்துப் புதிய நிலத்தில் பதியன் போடுவோம் !

புளித்த வார்த்தைகள் மாறும் போது.....சலித்த வாழ்க்கை......சட்டென  மாறும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு